தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சபாநாயகர் சபையில் விடுத்த அறிவிப்பு நீதிமன்றத்துக்கும் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கும் அழுத்தம் பிரயோகித்துள்ளது.
தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனை சட்டமூலமல்ல ஆகவே அதை ஏன் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி கேள்வியெழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நீதிமன்றத்துக்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை.
சட்ட ஆலோசனைகளை பெற்றே தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான அறிவிப்பை சபையில் முன்வைத்தேன். ஆகவே அறிவிப்பு குறித்து எவரும் உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்றார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டதாவது,
ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தேசிய கடன்களை மறுசீரமைக்கும் யோசனையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது.
அது சட்டமூலமல்ல தேசிய கடன் மறுசீரமைக்க எடுத்த தீர்மானத்தால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தொழிற்சங்கத்தினர் உயர்நீதிமன்றத்தை நாடினார்கள்.
இவ்விடயம் குறித்து பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பினர் கேள்வியெழுப்பிய போது ‘பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது என நீங்கள் (சபாநாயகர்) சபையில் குறிப்பிட்டீர்கள்.
நிறைவேற்றப்பட்டது சட்டமூலம் என்றால் நீங்கள் (சபாநாயகர்) கூறுவது சரி ஆனால் யோசனை ஒன்றை நிறைவேற்றி விட்டு அதை சட்டம் என்று குறிப்பிட முடியாது.
அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனையை நீதிமன்றத்தில் ஏன் சவாலுக்குட்படுத்த முடியாது.தேசிய கடன் மறுசீரமைப்பு,ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஏற்படும் பாதிப்பை ஏன் உயர்நீதிமன்த்தில் சவாலுக்குட்படுத்த முடியாது ? என சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயம் தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்பினீர்கள்,நான் பதிலளித்தேன். உரிய சட்ட ஆலோசனைகளுக்கு அமையவே நான் அந்த அறிவிப்பை பாராளுமன்றத்தில் விடுத்தேன்.ஆகவே இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து பேசுவது அவசியமற்றது என்றார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆளும் தரப்பினர் ஒரு யோசனையை கொண்டு வந்தால் அதை பாராளுமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாதா ? என்று குறிப்பிடுகின்றீர்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் எவரும் உயர்நீதிமன்றத்தை நாடலாம் அதற்கு தடையில்லை என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நீங்கள் (சபாநாயகர்) சபைக்கு விடுத்த அறிப்பை தொடர்ந்து ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இரத்துச் செய்தது.
பாராளுமன்றத்தில் நீங்கள் (சபாநாயகர்) விடுத்த அறிவிப்பு நீதிமன்றத்துக்கும்,நீதிமன்றத்தின் செயற்பாட்டுக்கும் அழுத்தம் பிரயோகித்துள்ளது. பாராளுமன்றத்துக்கும்,நீதிமன்றத்துக்கும் இடையிலான இடைவெளி தீவிரமடைந்துள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் நீதிமன்றத்திற்கும், நீதிமன்றத்தின் செயற்பாட்டுக்கும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. இவ்விடயம் குறித்து நீங்கள் நீதிமன்றத்தை நாடுங்கள் என்றார்.