இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாரம் இறுதியில் இலங்கை வரவுள்ளார். எனினும் விஜயத்துக்கான திகதியில் ஓரிரு நாட்கள் மாறுபட்டாலும் இலங்கைக்கான விஜயம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்தியா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயமானது இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளின் பிரதிபலிப்பாகவே காணப்படுகிறது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் முக்கிய நாடாகவும் அண்டைய நாடாகவும் உள்ள இலங்கையில் காணப்படக்கூடிய பாதுகாப்பு சார்ந்த கவலைகளை சரிசெய்யும் வகையில் இந்த விஜயம் அமையப்பெறும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் சீன ஆய்வு மற்றும் கண்காணிப்பு கப்பல்களின் தொடர்ச்சியான இலங்கை வருகைகள், டெல்லிக்கும் கொழும்புக்கும் இடையில் பல முறை இராஜதந்திர நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன.
சீன உளவுக்கப்பலான யுவான் வோங் – 5 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிட்டபோது, அதற்கு எதிராக இந்தியா அதிருப்தியையும் இராஜதந்திர ரீதியில் கடுமையான எதிர்ப்புகளையும் தெரிவித்தது.
ஆனால் எதிர்ப்புகளை கவனத்தில் கொள்ளாது யுவான் வோங் – 5 கப்பலுக்கு இலங்கை அனுமதியளித்தது. பெரும் சர்ச்சைக்குரிய தென்சீன கடலில் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஷி யான் – 6 என்ற சீன கப்பல் இலங்கையில் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை கடல் பகுதிகளில் சுமார் ஒரு மாத காலம் வரை நங்கூரமிட்டு ஆய்வு நடவடிக்கைளில் ஈடுபட தற்போது அனுமதி கோரியுள்ளது.
சீனாவின் இந்த கோரிக்கையானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் இராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் திருகோணமலையில் இந்தியா திட்டமிட்டுள்ள உத்தேச ஆற்றல் சக்தி மையம் தொடர்பான விடயங்களில் முன்னெடுப்புகள் மந்தகதியில் உள்ளன. அதே போன்று திருகோணமலை துறைமுகத்தை இந்திய – ஜப்பான் கூட்டுமுயற்சியில் அபிவிருத்தி செய்யவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி திட்டம், நகர அபிவிருத்தி திட்டங்கள் என பல்வேறு திட்டங்களில் முன்னேற்றங்கள் தடைப்பட்டுள்ளன. இவை குறித்தும் ஏனைய திட்டங்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய செய்தியுடனேயே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்.
இலங்கையின் தேசிய வருமானத்தை அதிகரிப்பதில் உள்நாட்டு அரசாங்கத்தின் பங்கு முக்கியமாகிறது. இந்தியாவின் 4.5 பில்லியன் டொலர் என்பது ஒரு கடன். குறிப்பிட்ட கால எல்லை வரை கடன் மீள பெறுவதை இந்தியா தள்ளி வைத்தாலும், அதனை என்றோ ஒருநாள் செலுத்துவதற்கான இயலுமையை நோக்கி இலங்கை செல்ல வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும்.
ஆனால் முதலீடுகளை உள்வாங்குவதில் பல்வேறு தாமதப் போக்கினையே கொழும்பு கையாள்கின்றது என்பது டெல்லியின் கவலையாக உள்ளது. குறிப்பாக இந்திய திட்டங்களில் இலங்கையின் இழுத்தடிப்பு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கியமாக கவனம் செலுத்தவுள்ளார்.
அதே போன்று இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் குறித்த இலங்கையின் உறுதிமொழிகள் தொடர்பாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் கொழும்பு சந்திப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.