கல்வித் துறையில் தொழில்நுட்ப புரட்சியின் வீச்சை கரோனா தொற்று பரவலுக்கு முன், அதற்குப் பின் என இரண்டு வகையாக பிரிக்க முடியும். கரோனா காரணமாக டிஜிட்டல் வழியில் ஆன்லைனில் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது அதிகரித்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் வகுப்பறையில் இருந்த கரும்பலகைகள் ஸ்மார்ட் போர்டுகளாக உருமாறின. அப்படியே அது டிஜிட்டல் சாதனங்களுக்கு பயணித்துள்ளது. இந்தச் சூழலில் கல்வியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் பங்கினால் கற்றலின் அணுகலை அடுத்தக்கட்டத்துக்கு மேம்படுத்தி, அனைவருக்கும் அதற்கான அக்சஸை சமச்சீராக கிடைக்கும் காலமாக மாற்றியுள்ளது டெக் யுகம்.
பள்ளிக் கல்வியில் தொடங்கி பல்கலைக்கழகம் வரையில் என பல்வேறு கல்வி சார்ந்த அமைப்புகளில் ஏஐ சாட்பாட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாட்கள் தனக்கு உள்ள செயற்கை நுண்ணறிவு திறனை பயன்படுத்தி பயனர்களுடன் கதைத்து வருகின்றன. ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் தனித்துவ முறையில் கல்வி பயில்விப்பது இதன் மூலம் சாத்தியமாகி உள்ளது.
உதாரணமாக, கட்டுரை எழுத, கம்யூட்டர் புரோகிராம் கோடிங் அடிக்க, சிக்கலான பிராப்ளங்களை தீர்வு காண, பாடநூல்களை கடந்த கல்வி அறிவைப் பெற, ஆய்வு மேற்கொள்ள, ஆழ்ந்த ஞானத்தை பெற என பல்வேறு வகையில் சாட்பாட்கள் உதவி வருகின்றன. மாணவர்கள் சுணக்கமின்றி கல்வி பயில இந்த பாட்கள் உதவுகின்றன. குறிப்பாக மாணவர்களை மோட்டிவேட் செய்யும் வல்லமையை இந்த பாட்கள் கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வாவ் சொல்ல வைக்கும் ஏஐ வாத்தியார்: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வாத்தி’ படத்தில் பாடம் எடுப்பதில் தான் சந்திக்கும் தடைகளை தொழில்நுட்பத்தின் துணை கொண்டு தகர்த்திருப்பார். ஏஐ வாத்தியாரும் கிட்டத்தட்ட அப்படித்தான். வெர்ச்சுவல் முறையில் அல்லது எந்திர வடிவில் இந்த வாத்தி இருப்பார். ஆன்லைனில் வீடியோ வழியே போதிக்கும் ட்யூட்டர்களுக்கு இவர் காட்ஃபாதர். ஏனெனில், வெறும் பாடம் மட்டும் எடுக்காமல் தனக்கு உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு மாணவர்கள் பாடத்தை / வகுப்பை கவனிக்கிறார்களா, அதனை அவர்கள் புரிந்து கொள்கிறார்களா என்பதை Face Recognition உதவியின் மூலம் அறிந்து கொள்வார்.
கற்றலில் அவர்களது ஆர்வத்தை அதிகரிக்க பல்வேறு யுக்திகளை இந்த வாத்தி கையாள்வார். மாணவர்களுக்கு எளிதில் புரிகிற வகையில் பாடம் எடுப்பார். அவர்களுக்கு பிரிந்து விட்டதா என்பதை சோதிப்பார். நிலவில் பாட்டி வடை சுடும் கதை தொடங்கி அதே நிலவில் சந்திரயான் வெற்றிப் பயணம் வரையிலான அப்டேட்களை அப்கிரேடாகி அறிந்திருப்பார். உலக நூலகங்களில் உள்ள அனைத்து புத்தகங்களையும் ஒரே பார்வையில் ஸ்கேன் செய்து படித்து முடித்தவர். அதனால் ஏஐ வாத்தியார் பேரண்டத்தில் தான் கல்லாதது கைமண் அளவு என சொல்லும் வகையில் செயல்படுவார்.
மாணவர்கள் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கிறார்களா, கண்களை திறந்துகொண்டே நித்தரையில் மூழ்கி உள்ளார்களா என்பதை நொடி பொழுதில் கண்டறிவார். கவனச்சிதறலை உடைக்க பொதுவான டாப்பிக்கில் கதைப்பார். ஆங்கிலக் கட்டுரைகளை மாணவர்களின் தாய்மொழியில் விளக்கி புரிய வைப்பார். வரலாறு பயின்றால் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் ஆட்சிக்கு சான்றாக நிற்கும் புராதன சின்னங்கள் வீற்றிக்கும் இடங்களுக்கு டைம் டிராவல் போல மாணவர்களை வெர்ச்சுவல் முறையில் அழைத்துச் செல்வார். வழக்கமான பாடம் சார்ந்து மட்டுமல்லாது சிறப்பாக எழுதுவது எப்படி, சிறந்த பண்பு, நேர்காணலில் சிறப்பாக செயல்படுவது, குழு விவாதம், கணிதத்தில் சிறந்து விளங்குவது போன்றவற்றில் மாணவர்களுக்கு உதவுவார். மாணவர்களின் செயல்பாடு குறித்த தகவல்களை பெற்றோர்களுக்கு ஒரு டைரி போல தெரிவிப்பார்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கணினி என அனைத்து பாடங்களையும் எடுப்பார். வெறும் பாடங்கள் மட்டுமல்லாது மைக்கேல் ஜாக்சனின் ‘Black or White’ பாடலில் வருவது போல பாடிக்கொண்டே பரதநாட்டியத்தையும், பிரேக் டேன்சையும் கலந்து ஆடும். மாணவர்கள் தயக்கமின்றி தெளிவாக பேசவும். மொத்தத்தில் பாடத்திட்டங்களை கடந்து உலகத்தரம் வாய்ந்த கற்றலை மாணவர்கள் பெற உதவுவார்.
இந்தியாவின் முதல் ஏஐ பள்ளி: கேரளாவில் இந்தியாவின் முதல் ஏஐ பள்ளி ஆகஸ்ட், 2023-ல் நிறுவப்பட்டது. இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற தொழில்நுட்பமும் மாணவர்களுக்கு பாடம் சொல்கிறது. மாணவர்கள் கல்வி கற்கும் முறையை மேம்படுத்தப்பட்ட வகையில் மாற்றும் நோக்கில் இதனை முன்னெடுத்துள்ளது சாந்திகிரி வித்யா பவன் எனும் பள்ளி. இதன் மூலம் மாணவர்கள் தனித்துவ கற்றல் முறையை பெற முடியும் என அந்தப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனைவருக்குமான அக்சஸ் சரிசமமாக கிடைக்கும்: கரோனா காலத்தில் மாணவர்களுக்கு டிஜிட்டல் சாதன அக்சஸ் சார்ந்து ஏற்றத்தாழ்வுகள் இருந்ததாக செய்திகள் வெளிவந்தன. அதை பயன்படுத்தும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்தாலும் அதில் சில செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை. இந்த நிலையில், அனைவரும் சமத்துவ ஸ்மார்ட்போன்களுக்கு மாற வேண்டிய நிர்பந்தம். பட்ஜெட் விலை போன்கள் முதல் பர்ஸை காலி செய்யும் போன்கள் வரை சந்தையில் விற்பனையானது.
வரும் நாட்களில் மாணவர்கள் உட்பட பல்வேறு மக்களிடையே டிஜிட்டல் சாதன பயன்பாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வு நீங்க சமத்துவம் ஏற்படலாம். ஏஐ தொழில்நுட்பம் கல்வியில் மேற்கொள்ளும் மேஜிக்கை சாத்தியப்படுத்த இது மிகவும் முக்கிய மாற்றமாக அமையும். அதேபோல, அதற்காக ஆகும் செலவும் மலிவானதாக மாறும். தேவையை விட சப்ளை அதிகம் இருந்தால் விலை குறையும் என்ற பொருளாதார விதி இங்கு பொருந்தும்.
கல்வி நிறுவனங்கள் அனைத்து மாணவர்களுக்கும் சமமான ஏஐ தொழில்நுட்ப அணுகலை வழங்க வேண்டும். சமூகத் தொண்டு நிறுவனங்களுக்கு அதற்காக இணைந்து பணியாற்ற வேண்டும். மாணவர்களுக்கு தொழில்நுட்ப சாதன பயன்பாடு சார்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக, மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் இந்த ஆதரவு கிடைக்க வேண்டும். டிஜிட்டல் சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதன் மூலம் இது சாத்தியமாகும். இதில் அரசின் பங்கும் முக்கியம்.