ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனும் (பாரதிராஜா), பரோட்டோ மாஸ்டர் வீரமணியும் (யோகிபாபு) ஒரு பேருந்துப் பயணத்தில் சந்திக்கிறார்கள். சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகள், வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இருவரும் தொலைத்துவிட்ட உறவைத் தேடி, அதை மீட்டுக்கொள்ள மேற்கொள்ளும் அந்தப் பயணத்தின் முடிவு என்னவானது என்பது கதை.
ராமநாதன், வீரமணி இருவரது தேடலின் பயணம் வழியே தற்காலத் தமிழ்ச் சமூகத்தில் குடும்ப உறவுகளில் மண்டிக்கிடக்கும் அகச் சிக்கல்களை, அதனால் விளைந்த இழப்புக்களை வாழ்க்கைக்கு நெருக்கமாகக் காட்டுகிறது இப்படம்.
தன்னைப்போல் அறத்தின் பக்கம் நிற்பவனாக மகன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு தந்தை, பணம் மற்றும் புகழுக்காக அறம் தொலைத்துவிட்ட மகன், உருவாக்கி வளர்த்த தந்தைக்கு விலை உயர்ந்த காரை பிறந்த நாள் பரிசாக வாங்கி அனுப்பிவிட்டு, அவரது 75-வது பிறந்தநாள் விழாவை ‘லைவ்’ காணொலியாகக் கண்டு, ‘வெர்ச்சுவல் கண்ணீர்’ வடிக்கும் அயலகப் பிள்ளைகள், அவருடன் பேச மறந்துவிட்ட
மகனின் ‘ஈகோ’வை நிர்வகிக்கும் குடும்ப வடிகாலாக மருமகள், ‘பெத்தாதான் பிள்ளையா?’ எனப் பிறந்தது முதல் தூக்கி வளர்த்து அழகுப் பார்த்த குழந்தையின் மீது, பாசப்பித்து கொண்டு வாழும் உறவுகளற்ற ஓர் எளியவன், காதலின் பின்னால் ஒளிந்திருந்த கள்வனை அறியாமல்போய், வாழ வேண்டிய வாழ்கையை இழந்த ஓர் இளம்பெண், எத்தனை வருடம் கழித்துத் திரும்ப வந்தாலும், எந்தச் சூழ்நிலையில் கைவிட்டுவிட்டுப் போயிருந்தாலும், கைவிடப்பட்டவளின் வலியைவிட, மன்னிப்புக் கோரி நிற்பவனின் வலி பெரிதல்ல என ஏற்க மறுக்கும் மற்றொரு இளம் பெண் என, முதன்மை, துணைக் கதாபாத்திரங்களை முழுமையுடன் வார்த்திருக்கிறார் தங்கர் பச்சன்.
குறிப்பாக, சிறுமி சாரல், அவளது அம்மா மீனா குமாரி, அத்தை, கண்மணி, ராமநாதனின் மருமகள் எனப் பெண் கதாபாத்திரங்கள் இப்படத்தில் படும் பாடுகள், ஆண்வர்க்கம் பெண்களை எப்படி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கான தமிழ்ச் சமூகத்தின் அப்பட்டமான பிரதிநிதித்துவம்.
தனது சிறுகதை என்றபோதும், அதைத்திரைக்குத் தழுவும்போது சுற்றிவளைக்காமல் விரல் பிடித்துக் கூட்டிக்கொண்டுபோய் நேரடியாகக் கதைச்சொல்லியிருக்கும் தங்கர் பச்சானின் திரைக்கதை வடிவம் இறுதிவரை இதம்.
பிரெஞ்சு புதிய அலை சினிமாவின் முன்னோடித் திரைப்பட மேதையான ஜான் லூக் கோதார்த்துக்குப் படத்தை அர்ப்பணித்திருக்கிறார் தங்கர் பச்சான். உறவுநிலைகள் சார்ந்து, மனித மனத்தின் ஊடாட்டத்தை தனது தொடக்கக் காலப் படங்களில் உலகம் வியந்த படத்தொகுப்பு உத்திகள் மூலம் தந்தவர் கோதார்த். அதேபோல், காட்சிகளின் நீளம், தொடர்ச்சி ஆகியவற்றில் பிரெஞ்சு புதிய அலை திரைப்படங்களை நினைவூட்டும் ‘செவ்வியல்’ தன்மையை இந்தப் படத்துக்குத் தனது படத்தொகுப்பு மூலம் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் எடிட்டர் பி.லெனின்.
திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர் ஆகிய இருவருக்கும் இணையாக ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் செய்திருக்கும் மாயம், இப்படத்தை மேலும் மேன்மைப்படுத்தியிருக்கிறது. கண்களுக்கு வலியைப் பரிசளிக்கும் இன்றைய த்ரில்லர் சினிமாக் களின் ‘வீடியோ கேம்’ கேமரா அசைவுகளை முற்றிலுமாகப் புறந்தள்ளி, காட்சியின் சூழலையும் கதாபாத்திரங்களின் உணர்வு நிலைகளையும் பிரதிபலிக்கும் கேமரா அசைவுகள், ஷாட்களின் நீளம், கேமராவுக்குள் நுழையும் ஒளியின் அளவு என ‘கிளாசிக்’ உணர்வை ஒளிப்பதிவுக்குள் நுழைத்து இழைத்திருக்கிறார் என்.கே.ஏகாம்பரம்.
‘செவ்வந்தி பூவே..’, ‘மன்னிக்கச் சொன்னேன்’ உட்பட, கதாபாத்திரங்களின் உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கடத்தும் கதைப் பாடல்களின் வரிகள்தோறும் ஒளிரும் வைரமுத்துவின் கவித்துவத்துடன் கைகோர்த்துக்கொண்டு கதை சொல்லியிருக்கும் பின்னணி இசையையும் தந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இப்படத்தின் மிகப்பெரிய ஆச்சர்யம் பாரதிராஜா. பல பேரை தனது தீர்ப்புகளின் வழியாகத் தண்டித்த நீதிபதி, குற்றவுணர்வு எனும் குற்றவாளிக் கூண்டுக்குள் சிக்குண்டு, மன்னிப்புக்காகக் கையேந்தி மருகும் காட்சி, தமிழ் வாழ்க்கை அறத்தின் மீது கொண்டுள்ள பிடிமானத்தை மீட்டெடுக்கும் முயற்சி. பாரதிராஜாவுடைய முதுமையின் தள்ளாமையே அவர் ஏற்றுள்ள ராமநாதன் கதாபாத்திரத்துக்குப் பாதி உயிரைக் கொடுத்துவிடுகிறது. மீதியை நடிப்பு மேதையாக அவர் அளவாக வெளிப்படுத்தி, தனக்குக் கிடைத்த வாழ்நாள் கதாபாத்திரத்தைச் சிறப்பு செய்திருக்கிறார்.
அடுத்த இடத்தில், அதிதி பாலன், யோகி பாபு, கவுதம் மேனன், மோகனா சஞ்சீவி, சிறார் நடிகர் சாரல் தொடங்கி படத்தில் இடம்பெற்றுள்ள அத்தனைக் கலைஞர்களும் குறையில்லாத கதாபாத்திர நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
தவறியும் வணிக அம்சங்கள் எதனையும் நுழைத்துவிடாமல், ஒரு நவீன இலக்கியப் பிரதியைப் போல் கதையின் முடிவைக் கையாண்டிருக்கும் இந்தப் படத்தை ,பிரெஞ்சு, பெர்ஷியன், இட்டாலியானோ தொடங்கி உலக சினிமா செழித்து விளங்கும் எந்த மொழியில் ‘டப்’ செய்து வெளியிட்டாலும் கண்களைக் குளமாக்கி, மனதைக் குணமாக்கும் கார் மேகம் இப்படம். குடும்பத்துடன் போய் இப்படத்தைக் காண்பதன் மூலம், மூன்று தலைமுறை மனிதர்கள் இதயம் நிறையப் பேரன்பை எடுத்துக்கொண்டு வரலாம்.