சிறு வயதிலிருந்தே அதிர்ஷ்டமில்லாதவர் என்ற காரணத்தால் ஒதுக்குதலுக்கும் கிண்டலுக்கும் உள்ளாகும் முருகன் (யோகிபாபு) ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முகவராகப் பணியாற்றுகிறார்.
மனைவி (ரேச்சல் ரெபெக்கா) மகன் என அழகான குடும்பம் இருந்தாலும் அன்றாட செலவுகளுக்குத் திண்டாடும் நிலையில் வாழ்கிறார். இந்த நிலையில் ஒரு சீட்டு கம்பெனி, முருகனுக்கு அதிர்ஷ்டப் பரிசாக கார் ஒன்றை வழங்குகிறது. அந்த கார் வந்தவுடன் முருகனின் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் உட்பட பல நன்மைகள் நடக்கின்றன.
அந்தப் பகுதியில் ஆய்வாளராக இருக்கும் சிவகுமாருக்கு (வீரா) காவல்துறைக்குள் இருக்கும் சிலரால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவற்றைச் சமாளித்து நேர்மையாகத் தன் கடமையைச் செய்ய முயலும் அவருக்கும் முருகனுக்கும் சில உரசல்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் முருகனின் கார் திருடப்பட, அது குறித்த புகாரை விசாரிக்கும் பொறுப்பு சிவகுமாருக்கு வருகிறது.
முருகனின் காருக்கு என்ன ஆனது? சிவகுமாருக்கும் முருகனுக்கும் இடையிலான பகை, இந்த விசாரணையில் என்ன தாக்கம் செலுத்துகிறது? இறுதியில் இந்த இருவரின் வாழ்வு எத்தகைய மாற்றத்தைச் சந்திக்கிறது என்பதைச் சொல்கிறது மீதிக் கதை.
பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவரும் ரேடியோ ஜாக்கியுமான பாலாஜி வேணுகோபால் இயக்கியிருக்கிறார்.
அதிர்ஷ்டமற்றவனாகக் கருதப்படும் ஒரு சாமானிய மனிதன், உயரதிகாரிகளின் அழுத்தங்களைத் தாண்டி தன் பணியைச் சரியாகச் செய்யப் போராடும் காவல்துறை அதிகாரி என இரண்டு நபர்களுக்கிடையில் நிகழும் இயல்பான மோதல்களை வைத்து மனித உணர்வுகள், மனிதர்களுக்கிடையிலான உறவுகள் குறித்த ஃபீல்குட் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.
முதல் பாதி திரைக்கதை தொடக்கத்தில் வசனங்களாகவே நகர்வது சற்று பொறுமையை சோதித்தாலும் நாயகனுக்கு கார் கிடைப்பதும் அதற்குப் பின் நிகழும் மாற்றங்களும் ரசிக்க வைக்கின்றன.
கார் தொலைந்துபோகும் இடைவேளைக் காட்சி இரண்டாம் பாதியை எதிர்பார்க்க வைக்கிறது. ஆனால் இரண்டாம் பாதித் திரைக்கதை திக்கு தெரியாமல் தடுமாறுகிறது.
குறிப்பாக முருகனும் அவருடைய மனைவியும் பிரிந்து வாழ்வது, ஆய்வாளர் சிவகுமாரின் நாய் கடத்தப்படுவது, அதற்கு பின் கூறப்படும் ஃப்ளாஷ்பேக், இறுதியில் முருகனுக்கும் சிவகுமாருக்கும் நிகழும் மனமாற்றம் என எதுவும் வலுவான காரணங்கள் இல்லாததால் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கின்றன.
சில இடங்களில் பளிச்சிடும் வசனங்களும் நடிகர்களின் இயல்பான நடிப்பு மட்டுமே இரண்டாம் பாதியைக் கடக்க உதவுகின்றன.
யோகிபாபு கதைக்குப் பொருத்தமான நகைச்சுவை வசனங்களாலும் சென்டிமென்ட் காட்சிகளில் மிகையற்ற நடிப்பின் மூலமாகவும் மனதைக் கவர்கிறார்.
அவருடைய மனைவியாக ரேச்சல் ரெபெக்கா, மகனாக நடித்திருக்கும் சிறுவன், உற்ற நண்பனாக நடித்திருக்கும் அப்துல், காவல்துறை ஆய்வாளராக வீரா ஆகியோரும் குறையற்ற நடிப்பைத் தந்திருக்கிறார்கள். ஷான் ரோல்டனின் பின்னணி இசை திரைக்கதைக்குத் தக்க துணை புரிந்திருக்கிறது. பாடல்களும் இனிமையாக உள்ளன.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய தொழில்நுட்ப அம்சங்களில் குறை சொல்ல ஒன்றும் இல்லை.
மொத்தத்தில் சில காட்சிகளும் வசனங்களும் ரசிக்க வைத்தாலும் திரைக்கதைத் தொய்வுகளால் ஒட்டுமொத்த திருப்தியைத் தரத் தவறுகிறான் இந்த ‘லக்கிமேன்’.