13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
13வது அரசியலமைப்பு திருத்தத்தின் காரணமாகவே மாகாண முதலமைச்சராக செயற்பட்டதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 13வது அரசியலமைப்புத் திருத்தம் தற்போதும் நடைமுறையில் உள்ளது என்றார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கான நிரந்தர வீட்டு உறுதிப்பத்திரங்கள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் இன்று (1) இதனை தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.
13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்று நாட்டில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுகிறது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அதிகாரத்தைப் பிரிக்கச் சொல்கின்றன. நான் முன்னாள் முதலமைச்சர். மாகாண சபைக்கு நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் எப்போதும் இருந்து வருகிறேன். கொழும்பில் இருந்து கொண்டு கல்வி அமைச்சில் பணியாற்றுவதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. சுதந்திரத்திற்குப் பிறகு, பல ஆண்டுகள் இதனை அனுபவித்துள்ளோம்.
முப்பது வருட யுத்தம் இந்த நாட்டை பின்னோக்கி கொண்டு சென்றது. அக்காலகட்டத்தில் மேல் மாகாண பாடசாலைகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த திறமையான ஆசிரியர்கள் பணியாற்றியதாக எனக்கு ஞாபகம். ஏனெனில் அவர்களால் இந்த மாகாணங்களில் வேலை செய்ய முடியவில்லை. இந்த மாகாணங்களில் உள்ள பிள்ளைகளுக்கு கல்வி வசதி இருக்கவில்லை. எங்களிடம் இருந்தது போர் மட்டுமே.
அதுபோல, 71ஆம் ஆண்டுப் போராட்டம், 83ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை, 88/89ஆம் ஆண்டு பயங்கரவாதம் என்பன இந்த நாட்டை பின்னோக்கி கொண்டு சென்றன. ஆழிப் பேரலை, மண்சரிவு மற்றும் கோவிட் தொற்றுநோய் போன்ற இயற்கை சீற்றங்களும் இந்த நாட்டை பின்னோக்கி கொண்டு சென்றுள்ளன.
நாம் ஒரு நாட்டின் அடிப்படையில் உயர வேண்டுமானால், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதைச் செய்ய முயலும்போது, தீவிரவாதிகள் எங்களின் கால்களை இழுத்துச் செல்கின்றனர். சிங்கள, தமிழ், முஸ்லிம் தீவிரவாதிகள் தமது அரசியல் பிழைப்புக்காக நாட்டை முன்னோக்கி நகர்த்துவதைத் தடுத்து நிறுத்துவதற்கு செயற்படுகின்றனர்.
13வது அரசியலமைப்பு திருத்தம் இந்த நாட்டின் அரசியலமைப்பில் உள்ள ஒன்று. அதன் ஊடாக மாகாண முதலமைச்சர்களாக செயற்பட்டோம். ஆனால் யுத்தம் காரணமாக எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. எனவே, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க அவர்கள் விரும்பவில்லை.
அரசாங்கம் என்ற வகையில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒதுக்கி விட்டு ஏனைய நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம். ஆனால் வடக்கிலுள்ள சில அரசியல் கட்சித் தலைவர்கள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைக் கேட்கின்றனர். அந்த இரண்டும் இல்லாமல் மற்ற நிர்வாக அதிகாரங்கள் தேவையற்றது என்கிறார்கள். இதனால், எந்த வழியில் சென்றாலும், அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் பிரபலமாக இல்லை. நாம் எடுக்கும் முடிவுகளால் சிலர் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். எனவே மாற்று வழிகளைத் தேடுகிறோம். ஆனால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட
வேண்டும் என்பதே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது. அதனால்தான் 13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் நாட்டில் விவாதம் எழுந்துள்ளது. இது இன்னும் நடைமுறையில் உள்ளது. எனவே, 13 வேண்டாம் என்று கூறினால், அந்தத் திருத்தம் அரசியல் சட்டத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
வடக்கு மாகாண சிங்கள மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். வெள்ளவத்தை, தெஹிவளை மற்றும் தென் மாகாணங்களில் உள்ள தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் நட்புறவுடன் உள்ளனர். கொழும்பு முஸ்லிம் மக்களும் சிறப்பாக செயற்படுகின்றனர். சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்தால் ஒரு நாடு என்ற வகையில் நல்ல பயணத்தை மேற்கொள்ள முடியும்.
நான் இதைச் சொன்னால் அடிபடுவேன். ஆனால் இதைப் பற்றி நாம் பேச வேண்டும். நாட்டைப் பற்றி சிந்தித்து முடிவெடுக்கும் போது யாராவது எதிர்ப்பார்கள். ஈஸ்டர் தாக்குதல் குறித்து எந்த மதத் தலைவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. இது தீவிரவாதிகளின் செயல்.
தற்போது அரசாங்கம் வலுவாக செயற்படும் போது பௌத்த மற்றும் இந்து மதங்களுக்கு இடையில் நெருக்கடிகளை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். எனவே நாம் இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். இதைப் பற்றி நாம் பேச வேண்டும்.