2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட தகவல்களை தாம் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ராஜபக்சவே பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்திய புலயாய்வு பிரிவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் உயர் மட்டத்தில் இருந்த அரசியல்வாதிகள் இது குறித்து அறிந்திருக்க வேண்டும்.
இதனை ஒரு சிறிய விடயமாகவே அவர்கள் கருதியிருந்தனர். ஆனால் இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் ஆகும். இந்த சம்பவம் இடம்பெற்ற போது மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் சென்றிருந்தார்.
ஒன்றரை நாள் கழிந்தே அவருக்கு இந்த சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூறுவது சரியானதே. நான் அவரை மதிக்கிறேன்.
இந்த சம்பவத்துடன், முக்கிய அரசியல் வாதிகளுக்கு பெரிய தொடர்பு இருக்கின்றது. அதிகாரத்தை கைப்பற்ற ராஜபக்சர்கள் தெரிந்தே இந்த சதியை செய்துள்ளனர்.
மற்றவர்கள் இதற்கு துணை இருந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட தகவல்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். சில ஊடகங்கள் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றன.
எனினும், இதுவொரு மிகப் பெரிய பிரச்சினை ஆகும். தவறு செய்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதற்கு அஞ்சும் ஆள் நான் இல்லை.
அன்றைய அரச தலைவர்கள் ராஜபக்சவே இதற்கு முழுப் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.