பாரத் அர்த்தம் நிறைந்தது, கங்கனா ரனாவத் கூத்து

ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் ‘இந்தியா’ என்ற பெயர் ‘பாரத்’ என்று மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பெயர் மாற்றம் குறித்து முன்னரே கூறியதாகவும், பாரத் என்ற பெயர் அர்த்தம் நிறைந்தது என்றும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;- “மகாபாரத காலத்தில் இருந்தே, குருக்ஷேத்திரப் போரில் பங்கேற்ற அனைத்து ராஜ்ஜியங்களும் பாரதம் என்ற ஒரு கண்டத்தின் கீழ் வந்தன. பாரதம் என்ற பெயர் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, இந்தியா என்றால் என்ன? செவ்விந்தியர்களை அவ்வாறு அழைப்பதற்கான காரணம் என்னவென்றால், பழைய ஆங்கிலத்தில் ‘இந்தியன்’ என்றால் ‘அடிமை’ என்று அர்த்தம்.

அதே போல் ஆங்கிலேயர்கள் நமக்கும் இந்தியர்கள் என்று பெயரிட்டனர். அதுவே அவர்கள் நமக்கு கொடுத்த புதிய அடையாளம். பழங்கால அகராதியிலும் கூட இந்தியன் என்பதன் அர்த்தம் அடிமை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை சமீபத்தில் மாற்றிவிட்டார்கள். மேலும் இது எங்கள் பெயர் அல்ல, நாங்கள் பாரதியர்கள், இந்தியர்கள் அல்ல.” இவ்வாறு கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.

———-

ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் ‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;- “ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

இந்த உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் ஜெர்சியில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்ற பெயரைப் பயன்படுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஜெய்ஷாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்று சேவாக் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சேவாக்கின் பதிவை மேற்கோள் காட்டி நடிகர் விஷ்ணு விஷால் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “மிகுந்த மரியாதையுடன் கேட்கிறேன்… இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா?” என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவை ரசிகர்கள் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

Related posts