உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைப்பதாக தெரிவிப்பது திருடனின் அம்மாவிடம் சாஸ்திரம் கேட்பது போன்றதாகும். அதனால் இந்த அரசாங்கம் ஒருபோதும் இதன் சூத்திரதாரியை கண்டுபிடிப்பதில்லை. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஆட்சியில் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டறிய நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் பக்கச்சார்பற்ற, நியாயமான விசாரணையை நடத்துமாறு தொடர்ச்சியாக நாங்கள் தெரிவித்து வந்தோம்.
இந்த மிலேட்சத்தனமான தாக்குதல்களால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. இந்த தாக்குதலை எப்போதும் அனைவரும் கண்டிக்கின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்பதனை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இது பாரதூரமான விடயமே. இந்த தாக்குதலில் இறந்த மக்களுக்கு நீதி, நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்.
அவ்வாறு கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இவ்வாறு கூறிவந்த அரசாங்கம் இந்த தாக்குதலின் பங்குதாரர்களா? இதன் உண்மைகளை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன் இந்த தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளும் மூடி மறைக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவாத, மதவாத தாக்குதல்கள் நினைவுள்ளதா?
அதனை காட்டித்தானே ஜனாதிபதி, பிரதமர் ஆசனங்களுக்கு வந்தார்கள். தேசிய ஐக்கியத்தை சீரழித்து தான் ஆட்சிக்கு வந்தார்கள். இவர்களால் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் உண்மைகளை வெளிப்படுத்தவில்லை.
இவ்வாறான நிலைமையில் தாக்குதலின் உண்மைகளை தேட சர்வதேசம் சில செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. இந்த அரசாங்கத்துக்கு முதுகெலும்பில்லை.
அரசாங்கத்துக்குள் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகள் உள்ளனரா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பேராயர் கதைக்கும்போது அவரை அவமதிக்கும் வகையில் அரசாங்கத்தினர் செயற்படுகின்றனர்.
அந்த மதத் தலைவர் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே முன்னிற்கின்றார். இதனால் உடனடியாக வெளிப்படையான விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்.
இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைப்பதாக கூறுகின்றனர். அது திருடனின் அம்மாவிடம் சாஸ்திரம் கேட்பது போன்றே இருக்கிறது.
தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தெரிவுக்குழுவின் தலைவராக நியமித்துவிடுவார்களோ தெரியவில்லை. இது வெட்கமானது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று, இறந்த உயிர்களின் மீது அமர்ந்து ஆட்சிக்கு வந்தவர்களுக்கு உண்மையை வெளிக்கொண்டு வர முடியவில்லை.
அத்துடன் உள்நாட்டு விசாரணை தோல்வியடைந்துள்ள இந்த நேரத்தில் இதனை சர்வதேச விசாரணைகளின் மூலமே தீர்க்க முடியும். இரத்த தாகத்தில் இருக்கும் அரசாங்கத்தால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாது.
இந்த பிரச்சினையை மூடி மறைக்காமல் உள்நாடு, சர்வதேசம் இணைந்த வெளிப்படைத் தன்மையுடனான சர்வதேச விசாரணை அவசியமாகும். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஆட்சியில் நிச்சயமாக இதன் உண்மைகளை கண்டறியவும் பிரதான சூத்திரதாரியை கண்டறியவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.