உதயநிதியின் பேச்சாலும் துணிச்சலாலும் பெருமை

உதயநிதி ஸ்டாலின் தெளிவாகப் பேசியுள்ளார்” என சனாதன சர்ச்சை குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜின் தாயார் மறைவையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று இரங்கலுடன் கூடிய ஆறுதலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சத்யராஜ், “எனது தாயாரின் மறைவு அன்றே தமிழக முதல்வர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். என் வீட்டுக்கு வந்து தற்போது ஆறுதல் கூறினார்.

தமிழக முதல்வருடன் எனக்கான பழக்கம் என்பது 37 வருடம் இருக்கும். கருணாநிதி வசனத்தில் வெளியான ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தின் படப்பிடிப்பு கோபாலபுரத்தில் நடைபெற்றது.

அப்போதிலிருந்தே முதல்வர் எனக்கு பழக்கம். முதல்வருக்கு நன்றி தெரிவிக்கொள்கிறேன்” என்றார்.

மேலும், சனாதன சர்ச்சை குறித்து பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலின் தெளிவாகப் பேசியுள்ளார். அவரின் சிந்தனைத் தெளிவும், கருத்தியல் ரீதியான தெளிவும், துணிச்சலும், ஒவ்வொரு விஷயத்தையும் அவர் கையாளும் முறையும் எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார்.

இதனிடையே, இந்த சர்ச்சை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Related posts