உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ராஜபக்ஷக்களே உள்ளனர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. உள்ளக விசாரணைகள் மூலம் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர முடியாது. குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்ஷ தரப்பினரே பாராளுமன்றத்தில் தெரிவு குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்வது என்பது குற்றவாளி ஒருவர் தனது குற்றத்தை தானே விசாரிப்பது போன்றது என்பதுடன் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் தற்போதைய அரசாங்கமே உள்ளது என வெளிக்கொணரப்பட்டுள்ள விடயங்கள் என்பது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.
இது ஒரு ஆச்சரியமான விடயமும் அல்ல. சனல் 4 காணொளியில் உள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தாக்குதலின்போது இடம்பெற்ற உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் காரணமாக நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
எவ்வாறாயினும் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கும், ஆட்சி அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்வதற்கும், அதனை வெற்றி கொள்வதற்கும் இராணுவத்தை பயன்படுத்தி இவர்கள் எந்தவொரு உச்சக்கட்டத்துக்கும் செல்வார்கள்.
தமது மக்களையும் இழப்பதற்கு தயார் என்பதை சரியான கோணத்தில் அறிந்துகொள்ள முயற்சித்தால் இந்த தாக்குதலின் பின்னணி குறித்த உண்மைகள் அனைத்தையும் சிங்கள மக்கள் விளங்கிக்கொள்வார்கள் என நான் நினைக்கிறேன்.
மேலும் நாட்டின் உள்ளக விசாரணைகள் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி மற்றும் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.
பாராளுமன்றத்தில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே பெரும்பான்மை காணப்படுகிறது.
இந்த பெரும்பான்மை, அரசாங்க தரப்பினரையே இன்று சனல் 4 நிறுவனம் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியுள்ளது.
தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ஷ தரப்பினரே உள்ளனர் என்பதை இந்த காணொளி மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்ஷ தரப்பினரே பாராளுமன்றத்தில் தெரிவுக் குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்வது என்பது வேடிக்கையானது.
அதாவது குற்றவாளி ஒருவர் தன்னுடைய குற்றத்தையே தானே விசாரிப்பது போன்றது. இது போன்ற முட்டாள்தனமான விடயத்துக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.