தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரை அடுத்த மேல்மொனவூரில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.11 கோடியில் 220 வீடுகள் உள்பட ரூ.176 கோடியில் 3,500 புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடந்தன. இந்த நிலையில் வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் 19 முகாம்களில் ரூ.79 கோடியே 90 லட்சத்தில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொனவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
அப்போது 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட 1,591 புதிய வீடுகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
வேலூரில் மட்டும் ரூ. 11 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 220 புதிய வீடுகளின் பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.