அரசாங்கத்தை தாக்குவதாக கூறி எமது இராணுவத்தினரை தாக்குவதற்கும் தாய்நாட்டை தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது. சனல் 4 கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரத்தம் மற்றும் கண்ணீரை அரசியல் லாபத்திற்காக மாற்றுவதற்கு கீழ்த்தரமான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2001 – 2004 காலப்பகுதி மற்றும் 2015 காலத்தை போன்றும் புலனாய்வுத்துறையை வீழ்ச்சியடைய செய்து இராணுவத்தினரை பலவீனமாவர்களாக்கி மீண்டும் நாட்டை இரத்த வெள்ளத்திற்குள் தள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது.
அரசாங்கத்தை தாக்குவதாக கூறி எமது இராணுவத்தினரை தாக்குவதற்கு இடமளிக்க முடியாது. எமது தாய்நாட்டுக்கு தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது. இதனால்செனல் 4 கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என்ற எச்சரிக்கையை விடுகின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோருபவர்கள் சில விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவின் எப்.பி.ஐ அமைப்பு இங்கே வந்தது, அவுஸ்திரேலியா பெடரல் பொலிஸ் வந்தது. அவர்கள் இங்கே விசாரணை நடத்தி அறிக்கையை முன்வைத்துள்ளனர். ஏன் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கேட்கின்றோம். இதேவேளை இந்த பிரச்சினைகளை மேற்குலக நாடுகளில் இருந்து கொண்டு இங்கே பிரிவினை வாதத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது.