தனித்து வாழும் இளம் பெண் ஷோபா (முல்லை அரசி), தன் காதலன் தியாகி (அசோக்) மூலம் பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாத பாலச்சந்திரன் (சமுத்திரக்கனி), வித்யா (அபிராமி) தம்பதியர், ஷோபாவுக்குப் பணம் கொடுத்து அவர் குழந்தையைத் தத்தெடுக்கிறார்கள்.
பாலனும் வித்யாவும் குழந்தையை அன்புடன் வளர்க்கிறார்கள். காதலனால் கைவிடப்படும் ஷோபா, தான் பெற்ற குழந்தையை மீட்க, தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் சொல்லாததும் உண்மை நிகழ்ச்சிக் குழுவின் உதவியை நாடுகிறார். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ராஷ்மி ராமகிருஷ்ணன் (லட்சுமி ராமகிருஷ்ணன்) ஷோபாவின் கதையைக் கேட்கிறார். திருமணம் செய்யாமல் குழந்தைப் பெற்று, பணத்துக்காக அதை விற்ற ஷோபாவுக்கு உதவ மறுக்கிறார். இதனால் சட்டப்போராட்டத்தில் இறங்குகிறார் ஷோபா. அதில் அவருக்கு வெற்றிக் கிடைத்ததா? பாலன் – வித்யாவின் நிலை என்ன என்பது மீதிக் கதை.
ஒரு குழந்தை மீதான உரிமை தொடர்பாக, பெற்றத் தாய்க்கும் வளர்ப்புப் பெற்றோ ருக்கும் இடையிலான போராட்டத்தை மையமாக வைத்து உணர்வுபூர்வமான திரைக்கதை அமைத்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதோடு, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் குறுக்குவழிகளில் தத்தெடுப்பதால் விளையும் சிக்கல்கள் குறித்து விழிப் புணர்வும் ஏற்படுத்தியிருக்கிறார்.
தனித்து வாழும் இளம் பெண்கள், காதல் என்னும் பெயரில் குழந்தைப் பெற்றுக்கொள்வது, அதை வளர்க்கவசதியும் இன்றி விட்டுக்கொடுக்கவும் மனமின்றி திண்டாடுவதுமான அவலநிலையையும் படம்பிடித்துக் காண்பித்திருக்கிறார்.
முதல் பாதி படம், நிஜத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பானகாட்சிகளால் நிரப்பப்பட்டுள்ளது. அதில், சில சுவாரசியங்கள் இருந்தாலும் தத்தெடுப்பு தொடர்பான மையக் கருவுக்கும் இதற்கும் வலுவான தொடர்பு ஏற்படுத்தப்படவில்லை.
குழந்தையை மீட்க 2 தாய்களுக்குள் நடக்கும் உணர்வுப்போராட்டம் தொடர்பான காட்சிகள் உரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தும் காட்சிகளை, அது தொடர்பான சட்ட நெறிமுறைகள் குறித்த தெளிவுடன் கையாண்டிருப்பதை உணர முடிகிறது. சட்டத்துக்கும் நியாயத்துக்கும் இடையிலான முரண்களைச் சுட்டிக்காட்டும் வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன.
நீதிமன்றக் காட்சிகளில் வசனங்கள் கூர்மை. குழந்தையைப் பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஓர் உண்மையை மறைப்பதன் மூலம் தீர்வைப் பெறுவதாகவும் அதன் பின் நல்ல நோக்கம் இருப்பதால் அரசு அதிகாரிகளும் துணைபோவதாகவும் காண்பித்திருப்பது மோசமான முன்னுதாரணம். அரசு குழந்தைகள் காப்பகங்கள் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் படத்தின் முடிவு அமைந்திருப்பதும் பிரச்சினைக்குரியது.
முல்லை அரசி, அபிராமி, வழக்கறிஞர் அனுபமா, லட்சுமிராமகிருஷ்ணன் என பெண் கதாபாத்திரங்களை ஏற்ற அனைவரும் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி. அசோக், கவிதாலயா கிருஷ்ணன், அரசு குழந்தைகள் நல மைய அதிகாரி மிஷ்கின், நீதிபதி நரேன் ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் பின்னணி இசை, கதைக்குத்தேவையான அமைதியுடன்ஒலிக்கிறது. உணர்வுபூர்வமான கதையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சி என்கிற அளவில் இந்தப் படத்தை வரவேற்கலாம்.