இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி

போரினால் பேரிழப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் முன்னேற்றகரமான ஒரு சூழலை நாம் எப்படி உருவாக்குவது என்பதை பற்றி யோசித்தபோது, அதற்கொரு கருவியாக கலையை உணர்ந்தேன். இதெல்லாம் என்னுடைய உணர்வுபூர்வமான பக்கங்கள். ஆனால், நிச்சயமாக, இந்த நிகழ்ச்சி மக்களை நிச்சயமாக குதூகலப்படுத்தும். அதுமட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் முதல் முதலாக நடைபெறவுள்ள எமது நிகழ்ச்சியூடாக ஒரு மாபெரும் இசைக் கட்டமைப்பு உருவாகப் போகிறது….” என பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி சனிக்கிழமை ‘யாழ் கானம்’ இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் நோக்கில் இலங்கைக்கு வருகைதந்த சந்தோஷ் நாராயணன் தனது இசை அனுபவங்கள், நிகழ்ச்சி பற்றி சுவாரஸ்யங்களை வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் பகிர்ந்துகொண்டபோது…

யாழ்ப்பாணத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியொன்றை நடத்த காத்திருக்கிறீர்கள்… உங்களது உணர்வலைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்…

இலங்கையில் உச்சகட்ட போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் என் மனைவியை சந்தித்தேன்.

அப்போது இந்த மக்களுக்கு எந்த வகையிலும் என்னால் உதவ முடியவில்லையே என்கிற கவலை எனக்கிருந்தது. அதனால், இந்த மண்ணுக்கு என்னால் முடிந்த ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

என் விருப்பம் அதுவாக இருக்கலாம். ஆனால், அதை செயற்படுத்த ஒரு கட்டமைப்பு வேண்டும். எங்களது முயற்சியில் பங்கெடுக்கவும் பலரது ஒத்துழைப்பு தேவை. அதனால், அது கிடைக்கும் வரை காத்திருந்தேன்.

நான் விரும்பியதை செயற்படுத்த இப்போது சரியான நேரம் வந்திருக்கிறது.

கலை, பொருளாதாரம், தனிப்பட்ட முன்னேற்றம் என அந்த மக்கள் எல்லோரும் வாழ்க்கையில் மேம்பட நாம் என்ன செய்யலாம் என சிந்தித்தேன்.

போரினால் பேரிழப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் முன்னேற்றகரமான ஒரு சூழலை நாம் எப்படி உருவாக்குவது என்பதை பற்றி யோசித்தபோது, அதற்கொரு கருவியாக கலையை உணர்ந்தேன்.

இதெல்லாம் என்னுடைய உணர்வுபூர்வமான பக்கங்கள். ஆனால், நிச்சயமாக, இந்த நிகழ்ச்சி மக்களை நிச்சயமாக குதூகலப்படுத்தும்.

அதுமட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் முதல் முதலாக நடைபெறவுள்ள எமது இசை நிகழ்ச்சியூடாக ஒரு பெரிய கட்டமைப்பு உருவாகப் போகிறது.

அதன் தொடர்ச்சியாக இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். அந்த சந்தர்ப்பங்களில் அந்தந்த இடங்களிலும் கூட மாபெரும் கட்டமைப்புகள் உருவாகி, அதனூடாக ஒரு நல்ல முன்னேற்றத்தை பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.

எனவே, இந்த நிகழ்ச்சியை ஒரு கொண்டாட்டம் போல் நிகழ்த்துவோம். அதுவே எனது நோக்கம்.

‘யாழ் கானம்’ நிகழ்ச்சியில் இருக்கக்கூடிய சிறப்பம்சம் என்ன?

தன்னம்பிக்கையோடு சொல்கிறேன்… இலங்கையில் இதுவரை நடந்த நிகழ்ச்சிகளிலேயே ‘யாழ் கானம்’ பிரம்மாண்டமான நிகழ்வாக இருக்கப்போகிறது.

எனது இசையை பின்தொடர்பவர்களுக்கு இது களிப்பூட்டும் ஒரு நிகழ்வாக இருக்கும்.

தமிழ், ஆங்கில மொழிகளில் பாடக்கூடிய, இலங்கையை சேர்ந்த சுயாதீன இசைக் கலைஞர்கள் உலகளவில் பரந்து வாழ்கிறார்கள். அவர்களை நான் தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருக்கிறேன்.

அவர்கள் வாழும் அந்தந்த நாடுகளின் கலாசாரங்களையும் இசை வடிவங்களையும் பின்பற்றுகிறார்கள்.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக கிட்டத்தட்ட 80 வீதமான இலங்கையை சேர்ந்த இந்திய கலைஞர்களையும் சந்தித்திருக்கிறேன். சாதாரண கலைஞர்களாக அல்லாமல், மிகப் பெரியளவில் சாதித்துக்கொண்டிருக்கிற அவர்களது இசையும் இந்த நிகழ்ச்சியூடாக கொண்டாடப்பட வேண்டும், அதை இந்த மக்களும் பார்த்து சந்தோஷப்பட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்த ஆசையும் நிறைவேறப்போகிறது.

***

பொதுவாக, இந்தியாவில் இருந்து ஒரு இசையமைப்பாளர் இலங்கைக்கு வந்து நிகழ்ச்சி நடத்துகிறார் என்றால், அதற்கென்று நிகழ்ச்சி நிரலொன்று இருக்கும். ஆனால், என்னுடைய நிகழ்ச்சியில் அதெல்லாம் இருக்காது.

நிகழ்ச்சிக்கு வருகை தரும் விருந்தினர்களை மேடையில் இல்லாமல், தனித்து கெளரவிப்போம். இதைப் பற்றி முன்னரே விருந்தினர்களிடம் சொல்லித்தான் நிகழ்வுக்கு அழைப்பு விடுப்போம்.

அதை தவிர அனுசரணையாளர்களின் பெயர்கள், விருந்தினர்களின் பெயர்கள், நிகழ்ச்சி பற்றிய விளக்க உரைகள் என்று நீண்ட நீண்ட பட்டியல்களை வாசித்து, நேரத்தை கடத்தி, ரசிகர்களை தூங்க வைக்கும் வழக்கம் கிடையாது. நேரடியாக, பாட்டுக்குப் போய்விடலாம்!

***

எனது முதல் படமான ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டிருந்தபோது, அது என்னுடைய ஆடியோ வெளியீடு என்பதையே மறந்துவிட்டேன். ஏனென்றால், நாங்கள் போவதே கலாய்ப்பதற்காகத்தான்.

மேடையில் இதை இதைத்தான் பேசுவார்கள் என்று முன்னதாக நாங்களே சொல்லிவிடுவோம். ஏனென்றால், அப்படி பேசுவதுதான் வழமை. அது தவறல்ல. ஆனால், அவ்வளவு நீண்ட உரைகளை கேட்கிற பார்வையாளர்கள் அலுத்து, களைத்து, தூங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

நான் அந்த பார்வையாளராகவே வாழ்ந்தவன். பல நிகழ்வுகளுக்கு நண்பர்களோடு சென்று கலாய்த்திருக்கிறோம். அப்போதே யோசித்துவிட்டேன், என்னுடைய நிகழ்ச்சிகளில் நேரக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும், பேசவேண்டிய முக்கியமான விடயங்கள் சுருக்கமாக சில செக்கன்களை தாண்டாமல் இருக்க வேண்டும் என்று.

***

இன்னுமொரு முக்கியமான விடயம்… எமது இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் இலவசமானது. அதற்காக இந்த நிகழ்வில் எந்தவொரு விடயமும் குறைவாக இருக்காது. மொத்தத்தில், இது மிகப் பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.

பார்வையாளர்கள் இந்த கொண்டாட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு குதூகலமாக பொழுதை கழிக்கவே வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்க வேண்டும். அத்தோடு, டிக்கெட் கட்டணங்கள் இல்லாமலும் ஒரு பிரம்மாண்ட நிகழ்வை நடத்த முடியும் என்பதை செய்து காட்டவுமே இந்த நிகழ்வை நம்பிக்கையோடு நடத்துகிறோம்.

நீங்கள் கானா இசைக்கு நெருக்கமானவர் என்பதால் ‘யாழ் கானம்’ என்பதை கானா என்று கருதலாமா?

யாழ் கானத்தை நீங்கள் ‘கானா’ என்றும் கருதலாம். உண்மையில் ‘கானம்’ என்றால் ‘பாடல்’; ‘இசையின் வடிவம்’ என்றும் சொல்லலாம்.

‘கானா’ என்பது உருது சொல். இதற்கும் பாடல் என்றே அர்த்தம்.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து துறைமுகம் வழியாக சென்னையில் வந்து குடியேறிய தொழிலாளர்கள் அந்த ஏரியாவில் இருப்பவர்களை பாடச் சொல்லி கேட்பார்கள். அப்போது அவர்கள் பிற பாடல்களை அதன் வரிகளை மாற்றி கிண்டல் செய்தும் இரங்கல் தெரிவித்தும் பாடுவார்கள். அப்படி வந்ததுதான் ‘கானா’.

‘யாழ் கானம்’ நிகழ்ச்சியின் பெரும்பகுதி ‘கானா’ பாடல்களாலும் அமையலாம்!

‘யாழ் கானம்’ நிகழ்வில் இலங்கை மண் சார்ந்த பாடல்கள் பாடப்படுகின்றனவா?

ஆமாம். உள்நாட்டுக் கலைஞர்கள், புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் வரும் இசைக்கலைஞர்கள் நம் மண்ணின் பெருமையை, வரலாறுகளை, சிறப்புக்களை பாடக்கூடியதாக பாடல்களை இணைத்திருக்கிறோம்.

இது ஒரு திறந்த ஜனநாயகத்துக்கான இசை மேடையாக இருக்கும். தற்போது இலங்கை மக்கள் ஐக்கியப்படத் தொடங்கிவிட்டார்கள். இதை தமிழ்நாட்டிலிருந்து பார்க்கிற ஒருவராக சொல்கிறேன்.

உண்மையில், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகள் அபிவிருத்தி அடைந்தால் இலங்கை இன்னும் அழகான நாடாகிவிடும். நான் இலங்கைக்கு வரும்போதெல்லாம் ‘ரொம்ப அழகான நாடு’ என்று சந்தோஷப்படுவேன். இவற்றை கருத்திற்கொண்டு இலங்கை சார்ந்த வரிகளை மிகக் கவனமாக அமைத்திருக்கிறோம்.

அந்த பாடல்களில் இரண்டு வரிகளை சொல்ல முடியுமா?

கண்டிப்பாக சொல்ல முடியாது. அது சர்ப்ரைஸ்!

இன்னொரு விடயம்… இடைவெளி இல்லாமல் (Non stop) அடுத்தடுத்து பாடல்கள் வந்துகொண்டேயிருக்கும். இந்த தகவலையும் மறைவில் வைத்திருந்தோம். ஆனாலும், கசிந்துவிட்டது.

இலங்கையில் உங்களுக்கு பிடித்த விடயங்களை உங்கள் பாடல்களில் அமைத்திருப்பதை பற்றி கூறுங்கள்…

என்னுடைய பாடல்களில் உதாரணமாக, “கண்டா வரச் சொல்லுங்க” பாடலை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம். இது, உங்கள் வாழ்க்கையில் யாரை நீங்கள் தலைவராக பார்க்கிறீர்களோ, யாரை முன்னோடியாக கருதுகிறீர்களோ அவருக்கான பாடலாகிவிடும்.

“உலகம் ஒருவனுக்கா…” பாடலும் அப்படித்தான்.

அந்த வகையில், யாழ் கானம் நிகழ்ச்சியிலும் இலங்கை கலைஞர்கள் மண் சார்ந்த பாடல்களை அதிகமாக பாடவுள்ளார்கள்.

ஊர் ஊராக சென்று மக்களிடையே விரவியிருக்கும் இசை வடிவங்களை உள்வாங்கி, அவற்றை உங்களது இசையில் வெளிப்படுத்தும் எண்ணம் எப்படி வந்தது?

2005இலிருந்து ‘லாப்பொங்கல்’ என்றொரு கிராமிய இசைக்குழுவில் நான் இணைந்திருந்தேன். அப்போது நாங்கள் தமிழ்நாடு முழுவதும் பயணித்து, கிராமிய கலைஞர்களை சந்தித்து, ‘எங்க ஃபோர்க் பேண்ட்ல வந்து பாடுங்க’ என்று கெஞ்சி கெஞ்சி கூப்பிடுவோம்.

எங்களுக்கெல்லாம் தமிழ்நாடு முழுக்க பிரயாணம் செய்வது, உலக சுற்றுப் பயணம் செய்வது மாதிரி. கையில் பணம் இருக்காது. ‍ஊர்களுக்குப் போகிற யாரையாவது, எந்த லாறியையாவது பிடித்துக்கொண்டு செல்வோம்…

அப்படி ஊர் ஊராக சென்று, கை காலில் விழுந்து, அரும்பாடுபட்டு நாங்கள் கூட்டிக்கொண்டு வந்தவர்கள்தான் அந்தோனி தாசன், ரீட்டா போன்றவர்கள்.

அந்தோனி அண்ணா அவரது ஊரில் மைக்கல் ஜாக்சன் மாதிரி வாழ்பவர். இரவு முழுவதும் 10 மணிநேரம் பாடி, ஆடுவார். அதேபோன்று, அடுத்த நாளும் ஆடுவார்…. இப்படி வருடத்துக்கு 200 நாட்கள் ஆடக்கூடியவர். அதீத ஆற்றல் கொண்டவர். இன்றைக்கு அவர் தாத்தா. அவருக்கு பேரப் பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஆனால், எப்படி இருக்கிறார் பாருங்க.

அவரை எங்கள் கிராமிய இசைக்குழுவில் இணைத்துக்கொண்ட பின்னர், ஒரு முறை சென்னை பெசன்ட் நகர் பீச்சில் 5000 பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்ச்சி செய்ய தயாரானோம். ஆனால், ஒரு லட்சம் பேர் வந்துவிட்டார்கள்.

5000 பேரை கடந்து கச்சேரி சத்தம் போய்ச் சேராவிட்டாலும், தொலைவில் நின்றவர்கள் படு ஜாலியாக நிகழ்வை கண்டுகளித்தனர். அதன் ஊடாக நானும் வலுப்படுத்தப்பட்டேன்.

நமது கிராமிய இசை வடிவங்களை அடையாளப்படுத்துவதே எனது இசைத் தேடல் என்பதை புரிந்துகொண்டேன்.

இது நான் யாரிடமும் சொல்லாத விடயம். இந்த நேரத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது.

2004இலிருந்து 2012 வரை எல்லா இசையமைப்பாளர்களிடமும் வேலை செய்தேன். அப்போதும் எனது இசைத் தேடலுக்கான பாதை சரிவர அமையவில்லை.

‘அட்டகத்தி’ ஆரம்பிக்கும்போதும் கானா என்றால் என்னவென்றே தெரியாது. எனினும், அதன் பிறகே எனது இசைக்கான பயணம் தொடர்ந்தது. அதன் வெளிப்பாடாகத்தான், மக்களோடு கலந்த இசையை வெளிக்கொண்டுவர கடும் முயற்சி எடுத்தோம். எங்களது முயற்சியை வேறு யாராவது அடையாளம் காணும்போது சந்தோஷமாக இருக்கும்.

‘சந்தோஷுக்கு பாட்டு வராது’ என்று முன்னர் ஒரு பேட்டியில் பாடகர் பிரதீப் சொன்னார். ஆனால், இன்றைக்கு உங்கள் குரல் இளைஞர்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறதே….

பாவம் இளைஞர்கள்!

உங்கள் குரலுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைக்கும் என ஆரம்பத்தில் நினைத்தீர்களா?

இப்போதும் என்னுடைய குரலுக்கு வரவேற்பு கிடைத்ததாக தெரியவில்லை. நீங்கள்தான் சொல்கிறீர்கள். என் குரலில் ஒரு பாடல் வரப்போகிறது என்று சொன்னாலே சிரிப்பாகத்தான் இருக்கும்.

மெட்டு போடும்போது பாடிக் காட்டுவேன். அந்த சத்தம், ப்ளக்கிங் சேர, இயக்குநர்கள் சில சமயங்களில் அந்த பாடலில் லாக்காகிவிடுவார்கள்.

எனக்கு பிறகு அந்த பாடலை யாராவது திறமையாக பாடினால், ‘அப்பாடா சூப்பர்’ என்று சொல்வேன். “இல்ல இல்ல…. உங்க குரல்தான் நல்லாருக்கு… அதுல ஏதோ ஒன்னு இருக்கு…” என்பார்கள்.

ஆனால், “தேன்மொழி…” பாடல் வெளிவந்த பிறகு ‘ஐயையோ இன்னும் நல்லா பாடணும்’ என்ற பயம் வந்துடுச்சி. ஆனால், பாட்டுத்தான் வருதில்லை!

கானாவை பொறுத்தவரையில் உணர்வை தொட்டாலே போதும். ஸ்வரத்தை தொட வேண்டியதில்லை.

மெட்டு போடும்போது பாடுவதால், இப்போது என் பாட்டு கொஞ்சம் பரவாயில்லை. இன்னும் 50 வருடங்களில் நல்ல பாடகராகிவிடலாம்! (கிண்டல் கலந்து சிரித்தார்)

இன்றைக்கு கானா பாடல்கள் எல்லா தரப்பு மக்களையும் ஈர்த்திருக்கிறது என்கிற திருப்தி உங்களுக்கு இருக்கிறதா?

ரொம்ப திருப்தி!

பாப் கல்சர் (pop culture) என்று சொல்வார்கள்.

ஒரு கானாவை கேட்டுவிட்டு ‘வாவ் சூப்பர்’ என்று சொல்லும்போது ஜாதி, மதம், பணக்காரன், ஏழை, ஆண், பெண், அது இது என்று இந்த பாகுபாடுகளை தாண்டி, பாடல் மேலே நிற்கும். பாப் கல்சரில் எது வருகிறதோ, அதில் சமத்துவம் அதிகரித்திருக்கும்.

ஒரு படத்தில் கானா பாடலை வைக்க முடிவெடுத்தால், ஒரு பெரிய பகுதியினரின் வாழ்க்கையே முன்னேறும் என்று கருதலாம்.

இலங்கையில் ஒரு கானா நிகழ்ச்சி செய்தால், ‘வாவ் ஸ்ரீ லங்கா ஒரு மிகப் பெரிய நாடு. இந்த மாதிரி எல்லாம் செய்றாங்க… ரொம்ப நல்லா நிகழ்ச்சி பண்றாங்க…’ என்று ஒரு நேர்மறையான தாக்கத்தை உருவாக்கிவிடுவார்கள்.

நான் ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்றொரு கானா அல்பம் செய்தேன். அதிலுள்ள எல்லா பாடல்களும் கானாதான். ‘எதுக்கு இதெல்லாம் பண்றீங்க… இதெல்லாம் ஒரு இசையா’ என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து கமன்ட் போடுவார்கள்.

அந்த கமன்ட்டுக்கு கீழ ஐந்நூறு அறுநூறு கமன்ட் வந்திருக்கும்.

‘உனக்கென்னடா தெரியும், நீ எப்டி சொல்ற’ என்று பதில் கமன்ட் போட்டு திட்டுவதுமுண்டு. இதுதான் பாப் கல்சர்.

ஒரு இசை வடிவமே உங்களுக்கு கீழே என்று வரும்போதுதான் நாம் தோற்றுப்போவோம்.

உலகம் முழுக்க பாருங்கள், அவரவர் அவரவரின் இசையை கொண்டாடுகிறார்கள்.

அதே மாதிரி நம் ஊரிலும் இசை வடிவங்களை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். வெகு சில இடங்களில்தான் ‘இது இசையே இல்லை’ என்று சொல்கிறார்கள்.

ஜாஸ் அல்பம், கானா அல்பம், திரையிசை அல்பம், ஹிப்ஹொப் என்று நிறைய செய்கிறோம். எல்லா வடிவங்களையும் பாராட்ட வேண்டும். அந்த வகையில், கானா பாடல் பெரியளவில் வரவேற்பு பெறும்போது நம் மண்ணின் இசை பேசப்படுவதில் ரொம்ப சந்தோஷம்.

திரையிசைக்கு நிகரான, தரமான அல்பங்கள், பாடல் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்துள்ளதை ஒரு போட்டியாக கருதுகிறீர்களா?

போட்டி எல்லாம் இல்லை. திரையிசை என்பது ஒரு தளம்.

நான் இசையமைத்த பாடல்களிலேயே மிகப் பெரிய ஹிட் பாடல் “எஞ்சாயி எஞ்சாமி”. அது என்னுடைய முதல் சுயாதீன பாடல். அதனால் அல்பம் பாடல்களுக்கும் திரையிசை பாடல்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

திரையிசைக்கு ஒரு கட்டமைப்பு இருக்கிறது. அதற்குள் ஒரு பாடலை பதிவிட்டால் அந்த உலகத்துக்கே நாம் யாரென தெரியவரும்.

என்னவொன்று… இரண்டிலும் மொக்கையாக பாடல்கள் அமைக்கலாம். அது மட்டும்தான் பொது விதி.

சினிமாவோடு தொடர்பின்றி வீட்டில் இருந்தபடியே நீங்கள் ஒரு பாடலை உருவாக்கி, பதிவேற்றி, அந்த பாடல் மக்களை போய் சேர்ந்தால், உலகிலேயே நீங்கள்தான் நம்பர் 1.

சினிமா, சமூக ஊடகத்துக்கு உதவிதான் செய்யும். இதில் போட்டி எல்லாம் கிடையாது.

சந்‍தோஷ் கர்நாடக சங்கீதம் கலந்து மெலடி பாடினால் எப்படி இருக்கும்?

காமெடியாக, கேவலமாக இருக்கும். நான் கர்நாடக இசைக் கச்சேரிகளை போய் பார்த்திருக்கிறேன். புல்லாங்குழல் வாசிக்க கற்றுக்கொண்டேன். மெலடி என்றால் உணர்வை கடத்துவது தானே முக்கியம். அந்த வகையில் மெலடியும் பாடலாம். ஆனால், கர்நாடக சங்கீதம் வராது.

உங்களுக்காக வரிகளை திருத்தி கஷ்டப்பட்டு பாடல் எழுதும் பாடலாசிரியர் யார்?

என்னோடு பணியாற்றும்போது சிரமமே இருக்காது. முதலிலேயே சந்தத்துக்கு பாட்டு எழுதச் சொல்லிவிடுவேன். பாடலாசிரியர்களை சுதந்திரமாக விட்டாலே எழுதுவது கடினமான காரியம். இதில் டார்ச்சர் பண்ணா எப்படி எழுதுவாங்க?

வண்டி ஓட்டும்போது கையை பிடித்துக்கொண்டே ஓட்டுவதை போல… சிரமப்படுத்தி பாட்டு எழுத வைப்பதும் கடினம்.

நீங்கள் கஷ்டப்பட்டு மெட்டமைத்த பாடல்?

‘குக்கூ’, ‘வட சென்னை’ பாடல்கள் என்று சொல்லலாம். வீட்டில் சந்தோஷமாக இருக்கும்போது சோகமான பாடல் வேண்டும் என்று கேட்பார்கள். அப்போது பாட்டில் அதற்கான சூழலை கொண்டுவர வேண்டும் என்கிற பொறுப்பும் பயமும் வந்துவிடும்… அவ்வளவுதான்!

களத்தில் இறங்கி வேலை செய்பவர் நீங்கள்… அந்தந்த சூழலில் கலைஞர்களை இனங்கண்டு அவர்களோடு பயணிப்பவர்… இனிவரும் காலங்களில் இலங்கை கலைஞர்களோடும் இணைந்து பணியாற்றும் எண்ணம் இருக்கிறதா?

கண்டிப்பாக…. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் பிறந்து பல நாடுகளில் வசிக்கும் மக்களை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால், உள்நாட்டில் இருபது பேரைக் கூட சந்திக்கவில்லை. இம்முறை நான் வந்ததே அதற்காகத்தான்.

ஒரே மேடையில் நிகழ்ச்சி செய்துவிடுவதால் மாத்திரம் எந்த இசைக் கலைஞரோடும் நான் தொடர்ந்து பணியாற்றிவிடுவதில்லை.

ஒருவர் மேடையில் பாடுகிறார் என்றால், அதனால் அவரும் மக்களும் பயனடைய வேண்டும். அந்த கலைஞனின் கலைத்திறமையில் முன்னேற்றம் இருக்க வேண்டும். இதில் நான் மிகக் கவனமாக இருப்பேன்.

தமிழ்நாடு மற்றும் இலங்கையில் 6 லட்சம் தமிழ் கலைஞர்கள் உள்ளனர். அவர்களின் திறமைகளை அடையாளப்படுத்துவதற்கான எனது பயணம் இனியும் தொடரும்…!

Related posts