போய் ஆஸ்கர் கொண்டு வா! ரஜினி

‘2018’ படத்தின் இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அற்புதமாக தொடங்கிய நாள்” என உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லைகா தயாரிக்கும் ‘ரஜினி 170’ படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன், 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார். அவர் தவிர, ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்ட நடிகர் பட்டாளமே களமிறங்குகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திர லுக்கை லைகா வெளியிட்டது. அதில் கோட், சூட், கூலிங் கிளாஸ் அணிந்தபடி ஸ்டைலிஷ் ஆன தோற்றத்தில் ரஜினியின் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. திருவனந்தபுரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் உள்ள நடிகர் ரஜினியை ‘2018’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் நேரில் சந்தித்து பேசினார்.

இது தொடர்பான தனது உற்சாகத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “என்ன ஒரு அற்புதமான படம் ஜூட். எப்படி படமாக்கினீர்கள்? அட்டகாசமான படைப்பு. என நீங்கள் கூறியதையடுத்து, ஆஸ்கர் விருதுக்கான ஆசீர்வாத்ததை உங்களிடமிருந்து பெற்றோம். “போய் ஆஸ்கார் கொண்டு வா, என் ஆசிகள் மற்றும் பிரார்த்தனைகள்” என நீங்கள் கூறியது மறக்க முடியாது. மறக்கமுடியாத வாய்ப்பு. இதை ஏற்படுத்திக்கொடுத்த சௌந்தர்யாவுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Related posts