யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவு வேளை அத்துமீறி நுழைந்த குழு ஒன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை இரவு சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புக் கடமையாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது, அங்கு வந்த போதையில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்படும் நபர்கள், யாரோ ஒருவருடைய பெயரைக் கூறி அவர் நிற்கிறாரா? என்று கேட்டிருக்கின்றனர். இரவு வேளை என்பதால் அவர் இல்லை என்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனை அடுத்து வாய்த்தர்கத்தில் ஈடுபட்ட அவர்களில் ஒருவர் பூட்டப்பட்டிருந்த கதவின் மீது ஏறி உள் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து அயலில் இருந்தவர்கள் சிலர் வந்து பாதுகாப்பு உத்தியோகத்தரைக் காப்பாற்றியிருக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளது.
சங்கானைப் பகுதியில் சமூகவிரோதச் செயற்பாடுகள், திருட்டுச் சம்பவங்கள் உட்பட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் சில குழுக்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் நிலையில் பொதுச் சந்தை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றமை தொடர்பில் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்களா? என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.