பாக்ஸ் ஆஃபீஸில் உயரே பறக்காத கங்கனா ரனாவத்தின் ‘தேஜஸ்’

கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘தேஜஸ்’ திரைப்படம் முதல் 3 நாட்களில் வெறும் ரூ.3.80 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியான ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் 27-ம் தேதி சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் ‘தேஜஸ்’ பாலிவுட் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் கங்கனா விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். அன்சுல் சவுகான், ஆசிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது. கூட்டம் இல்லாததால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

படம் முதல் நாள் ரூ.1.25 கோடியையும், இரண்டாவது நாள் ரூ.1.30 கோடியையும், ஞாயிற்றுக்கிழமையான நேற்று ரூ.1.25 கோடியையும் வசூலித்துள்ளது. அதன்படி முதல் 3 நாட்களில் படம் மொத்தமாக இதுவரை ரூ.3.80 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரானதாக கூறப்படும் இப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவராததால் வசூலில் பின்தங்கியுள்ளது. கங்கனா ரனாவத்தின் சமீபத்திய 2 படங்களும் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கங்கனா, இந்திரா காந்தியாக நடித்து இயக்கியுள்ள ‘எமர்ஜென்சி’ படம் வெளியாக இருக்கிறது.

முன்னதாக, வசூல் சரிவைத் தொடர்ந்து நடிகை கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது” என்று கூறினார்.

Related posts