மலையகம் 200 நிகழ்வில் தமிழ் நாட்டு முதலமைச்சரின் ஒளி நாடா அங்கு ஒளிபரப்பப்படாதமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அத்துடன் இந்த சம்பவம் தமிழர்களுக்கு செய்த அவமானமாகவே நாங்கள் பார்க்கிறோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அமைத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மக்களின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசியல் ஸ்திரமற்ற அரசாங்கமாக இருந்துகொண்டு பல்வேறு திணைக்களங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன.
அதன் பிரகாரம் 1894ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை மக்களின் விருப்பம் இல்லாமல் வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அந்த தபால் நிலையம் இலங்கையில் இருக்கும் மிகவும் பழைமைவாய்ந்த கட்டிடமாகும். அதனால் அரசாங்கம் இது போன்ற நிகழ்ச்சி நிரல்களை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் இந்த தபால் நிலையத்தை 2017ஆம் ஆண்டும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அப்போது நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை நிறுத்தினோம். தற்போது மீண்டும் குறித்த தபால் நிலையத்தை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி அண்மையில் நுவரெலியாவுக்கு சென்று அங்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்த தபால் நிலையத்தை விடுவிக்க வேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் வீட்டுக்கு செல்லவேண்டும் என தபால்மா அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒருவர் அதிகாரிகளை இவ்வாறு அச்சுறுத்தும் வகையில் கதைப்பது எந்தளவு பொருத்தம் என நாங்கள் கேட்கிறோம். இஸ்ரேல் பிரதமரைப்போல் எமது நாட்டு ஜனாதிபதி இருக்கக்கூடாது என நாங்கள் தெரிவிக்கிறோம். ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக அரச அதிகாரிகள் ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் கடந்த வாரம் மலையகம் 200 என்ற நிகழ்வை அரச நிகழ்வாக மேற்கொண்டிருந்தது. அதில் இந்திய நிதி அமைச்சர் கலந்துகொண்டிருந்தமை எமக்கு மகிழ்ச்சியாகும். என்றாலும் அந்த நிகழ்வில் தமிழ் நாட்டு முதலமைச்சரின் ஒளி நாடா அங்கு ஒளிபரப்பப்படாதமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
தமிழ் நாட்டில் 7 கோடி மக்களின் முதலமைச்சரின் ஒளி நாடாவை அந்த நிகழ்வில் ஒளிபரப்ப மறுத்திருப்பது தமிழர்களுக்கு செய்ய அவமானமாகவே நாங்கள் பார்க்கிறோம். இந்த செயல் அரசாங்கத்துக்கும் பாதிப்பாகும். அத்துடன் இந்த நடவடிக்கை தொடர்பாக தற்போது பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்றார்.