‘டைகர் 3’ முதல் நாள் முதல் காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்களைப் பெற்ற நிலையில் ‘இது ஆபத்தானது’ என நடிகர் சல்மான் கான் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “டைகர் 3 திரையிடலின்போது திரையரங்குக்குள் பட்டாசு வெடிக்கப்பட்டது குறித்து கேள்விப்பட்டேன். இது ஆபத்தானது. நமக்கும், மற்றவர்களுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் படத்தை ரசிப்போம். பாதுகாப்பாக இருப்போம்” என பதிவிட்டுள்ளார்.
திரையரங்குக்குள் பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்: சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’. பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இதை மனீஷ் சர்மா இயக்கியுள்ளார். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் ஒன்றாக வெளியாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று (நவ.12) உலகம் முழுவதும் வெளியானது.
இப்படத்தின் முதல் காட்சிக்கு நாடு முழுவதும் (தமிழகம் தவிர்த்து) 6 மணிக்கு திரையிடப்பட்டது. சல்மான் கான் ரசிகர்கள் பலரும் அதிகாலை முதலே பட்டாசு வெடித்து நடனமாடி மகிழ்ந்தனர். மகாராஷ்டிராவின் மாலேகான் நகரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு உள்ளேயே பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சல்மான் கானின் அறிமுகக் காட்சியின் போது உற்சாக மிகுதியில் ராக்கெட் பட்டாசுகளை வெடித்தனர்.
அதேபோல படத்தில் ஷாருக் கான் ஒரு கேமியோ ரோல் செய்துள்ளார். அவரது காட்சியின்போது ராக்கெட்டுகளை சரமாரியாக பறக்கவிட்டனர் ரசிகர்கள். இதனால் திரையரங்கம் முழுவதும் புகை மண்டலமானது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் இந்த செயலை பலரும் கண்டித்து வந்தனர். இதனையடுத்து இது தொடர்பாக மாலேகான் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.