மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் இடம்பெற்ற ‘மக்கள் சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டத்தை துறந்ததற்கான காரணம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராகவா லாரன்ஸ் கூறியதாவது: “மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில்’ மக்கள் சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் இடம்பெறச் செய்தோம். ஆனால் ரஜினி ரசிகர்களே அதற்கு வருத்தப்பட்டார்கள். ‘சூப்பர்ஸ்டார் இருக்கும்போது ’மக்கள் சூப்பர்ஸ்டார்’ என்று போடுவது தவறில்லையா?’ என்று வருத்தப்பட்டனர். அந்த நேரத்தில் எனக்கு அவ்வளவு பக்குவம் இல்லை. ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டேன்.
நமக்கு சூப்பர் ஸ்டாரை பிடிக்கும், மக்களுக்கு நல்லது செய்கிறோம். அதனால் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று போடுவதில் என்ன தவறு? இது அப்பா பேரை சேர்த்துக் கொள்வது போலத்தானே என்று எனக்கு மிகவும் வருத்தம் ஆகிவிட்டது.
இயக்குநர் சாய் ரமணியை அழைத்து, அதை நீங்கள் விருப்பப்பட்டு போட்ட மாதிரி சொல்லிவிடுங்கள். ரொம்ப தப்பு தப்பாகப் பேசுகிறார்கள் என்று கூறினேன். வீட்டில் என் அம்மாகூட என்னிடம் ’உன்னுடைய தலைவன் பெயரைத்தானே சேர்த்துக் கொண்டாய்? இதில் என்ன தவறு’ என்று கேட்டார். அதற்கு நான், ‘மிகவும் தப்பாக பேசிவிட்டார்கள் அம்மா. இனி அது இருக்க வேண்டாம்’ என்று சொன்னேன்” இவ்வாறு ராகவா லாரன்ஸ் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்த படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. படத்தில் லாரன்ஸின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது.