மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளில் இந்த வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இத்தகைய நிகழ்வுகள் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடந்த 2ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் ‘நாம் 200’ எனும் நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது. இந்தநிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ்குணவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட இலங்கையின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் இந்திய அரசியல் தலைவர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களை தேசிய நீரேட்டத்தில் இணைப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தியதுடன் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருந்தார். அத்துடன் மலையக மக்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய 10 பேர்ச் காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலையக மக்கள் தமது காணிகளில் தேயிலையை பயிரிட்டு அவற்றை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கக்கூடிய வகையில் பெருந்தோட்டத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் அதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அழைப்பும் விடுத்திருந்தார்.
மலையக பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றும் வகையிலான திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி இந்த அறிவிப்பினை விடுத்திருந்தார்.
இதேபோன்றுதான் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மலையக மக்களின் வளர்ச்சிக்கு இந்தியாவின் உதவிகள் தொடரும் என்று உறுதிமொழி வழங்கியிருந்தார். இவ்வாறு ‘நாம் 200’ மாநாட்டில் பங்கேற்றிருந்தவர்கள் மலையக மக்களின் எதிர்காலம் தொடர்பிலும் அவர்களுக்கான உதவிகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
மலையக மக்கள் குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் அவர்களது வாழ்வாதாரம் இன்னமும் கட்டியெழுப்பப்படவில்லை. அடிப்படை வசதிகளற்ற வகையிலேயே பெருந்தோட்ட மக்கள் இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். காணி உரிமை, வீட்டுரிமை இன்றி அவர்கள் தொடர்ந்தும் லயன் அறைகளிலேயே வாழ்ந்துவரும் நிலைமை நீடித்து வருகின்றது.
அதேபோன்றே உரிய வருமானங்கள் இன்றி அவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காணப்படும் தேயிலைத்துறையை கட்டியெழுப்பிய மலையக மக்களுக்கு இன்னமும் போதியளவு சம்பளம் பெறமுடியாத நிலைமை நீடித்து வருகின்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு கூட பெரும் இழுபறி நிலைமை ஏற்பட்டிருந்தது. தற்போதுகூட ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும் சகல தொழிலாளர்களுக்கும் அந்த தொகை கிடைக்கின்றதா என்றால் அதற்கு உரிய பதில் வழங்க முடியாத நிலைமையே நீடித்து வருகின்றது.
இவ்வாறு அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கான கல்வி, சுகாதார வசதிகளை உரிய வகையில் வழங்கவேண்டுமானால் அதற்குரிய திட்டமிடல்கள், அவசியமாகவுள்ளன. தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தயாராக உள்ளதாகவும் அதற்கான ஒத்துழைப்புக்களை சகல தரப்பினரும் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார்.
இந்த நிலையில் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் அந்த மக்களின் பிரதிநிதிகள் மத்தியில் ஒற்றுமையும் ஒருமைப்பாடான செயற்பாடும் அவசியமாகவுள்ளது. ஆனால் அவ்வாறு ஒற்றுமைபடும் விடயத்தில் மலையக அரசியல் கட்சிகளின் தலைமைகள் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை,
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம், யாழ். நண்பர்கள் அமைப்பு, நாவலப்பிட்டி அகில இலங்கை ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன நிகழ்வுகளை நடத்தியிருந்தன. மன்னார் தொடக்கம், மாத்தளை வரையான பாதயாத்திரை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலவாக்கலை பாதயாத்திரை, நிகர் அமைப்பின் மலையக 200 வருட மர நடுகை வார நிகழ்வு, நிகர் அமைப்பின் மலையகம் 200 நினைவு முத்திரை வெளியீட்டு நிகழ்வு, விம்பம் அமைப்பின் போட்டி நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த நிகழ்வுகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சகலரும் ஒன்றிணைந்து பங்கேற்றிருக்கவில்லை. ஒரு சில நிகழ்வுக்கு சில கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். இதேபோன்றுதான் ‘நாம் 200’ நிகழ்வில் எதிர்க்கட்சியினர் பங்கேற்றிருக்கவில்லை.
இந்த நிகழ்வானது அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றிருந்தது. ஜீவன் தொண்டமானின் நீர்வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் எவரும் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கவில்லை.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு தனக்கு கிடைக்கவில்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்ததுடன் மாநாடு வெற்றிபெற வாழ்த்துவதாகவும் அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்றே தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி. திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. நிகழ்வில் பங்கேற்பதற்கான அழைப்பு கிடைக்கவில்லை என்று மனோ கணேசன் எம்.பி. குற்றம்சாட்டியிருந்தபோதிலும் சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.
மலையக மக்களின் இலங்கை வருகையை குறிக்கும் வகையிலும் அவர்களின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயும் வகையிலும் நடத்தப்பட்ட அரசாங்கத்தின் அனுசரணையுடனான தேசிய நிகழ்வில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றிருக்கவேண்டும். இந்திய அரசியல் தலைவர்கள் உட்பட்ட பெருந்தொகையானோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் சகல மலையக பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
இந்த விடயத்தில் யார் தவறிழைத்தார்கள் என்பது தொடர்பில் ஆராய்வதைவிட எதிர்காலத்திலாவது இத்தகைய நிகழ்வுகளில் சகல மலையக பிரதிநிதிகளும் பங்கேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இவ்வாறான மலையக மக்கள் தொடர்பான பொதுவான விடயங்களில் அரசியல் சுயநலன்களை அப்பால் வைத்துவிட்டு அனைத்து தரப்பினரும் ஒன்றுபடவேண்டியது அவசியமாகவுள்ளது
ஏனெனில் மலையக மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியிலேயே தமது அன்றாட வாழ்க்கையினை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமானால் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலை வர்கள் மத்தியில் ஒற்றுமை என்பது அவசியமானதாகும் தேர்தல் காலங்களில் வேறுபட்டு நின்றாலும் மலையக மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஒருமைப்பாட்டுடன் செயற்படவேண்டும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளராக ஜீவன் தொண்டமான் பதவியேற்றதையடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுடன் நெருக்கமான உறவை பேணியிருந்தார். முற்போக்கு கூட்டணியின் அலுவலக திறப்பு விழாவிலும் அவர் பங்கேற்றிருந்தார். ஆனால் இந்த நிலைமை தற்போது மாறியிருக்கின்றது. இனியாவது மலையக மக்களின் நன்மை கருதி இந்த தலைவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.