இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விசாரணையின்றி சுட்டுக் கொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதைக் கண்டிக்கும் வகையிலும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் காசர்கோடு ஒருங்கிணைந்த முஸ்லிம் ஜமாத் ஏற்பாட்டில் காசர்கோட்டில் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் கலந்துகொண்டு பேசிய காசர்கோடு காங்கிரஸ் எம்பியும், நடிகருமான ராஜ்மோகன் உன்னிதன், “ஜெனிவா ஒப்பந்தம் உள்பட அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களையும் மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியின் நாஜிக்கள் விசாரணையின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். போர்க் கைதிகளை இவ்வாறு சுட்டுக்கொல்வது நியூரெம்பெர்க் மாடல் என்று அழைக்கப்பட்டது.
அதேபோன்று, தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விசாரணையின்றி சுட்டுக் கொல்ல வேண்டும். அதற்கான சரியான நேரம் இது. ஏனெனில், உலகத்தின் முன் போர் குற்றவாளியாக நிற்பவர் பெஞ்சமின் நெதன்யாகு” என்று தெரிவித்தார். ராஜ்மோகன் உன்னிதனின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.