நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘லியோ’ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தார். மேலும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளையும் கூறியிருந்தார். இதற்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்தார்.
“மிகவும் கேவலமாகவும் அவமரியாதை செய்யும் வகையிலும் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவரைப் போன்ற ஒருவருடன் சேர்ந்து நடிக்காததில் மகிழ்ச்சி. இனிமேலும் நடிக்காமல் பார்த்துக்கொள்வேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்துக்கு அவப்பெயரை உண்டாக்குகிறார்கள்” என்று கூறியிருந்தார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜும் மன்சூர் அலிகான் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார். நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில்,மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், “பழைய படங்கள் போல கதாநாயகிகளுடன் நடிக்கும் வாய்ப்பு இதில் (லியோ) இல்லை என்ற ஆதங்கத்தை காமெடியாக சொன்னேன். அதை மட்டும் ‘கட்’ பண்ணி போட்டு கலகம் பண்ண நினைத்தால் நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு அஞ்சுகிறவனா? த்ரிஷாவிடம் தப்பான வீடியோவை காட்டியிருக்கிறார்கள்.
நான் எப்போதும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன் என்று எல்லோருக்கும் தெரியும். த்ரிஷாவிடம் வீடியோவை தப்பாக கட் பண்ணி காண்பித்து கோபப்பட வைத்துள்ளனர்”எனக் கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகர் சங்கம் வலியுறுத்தல்
நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகைகள் பற்றி மன்சூர் அலிகான் மோசமான கருத்துகளைத் தெரிவித்தது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் உடன் நிற்கும்.பொறுப்புணர்ந்து பேச அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.
எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம். இக்கீழ்செயல் காரணமாகத் தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கக் கூடாது? என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கருதுகிறது.
இந்த தனி நபர் விமர்சனம் மட்டும் அல்லாது, வெகு நாட்களாக பொது ஊடகங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல பொய்க் கதைகளையும் திருத்த நிகழ்வுகளையும் பொழுதுபோக்கு என்ற பெயரில் பரப்பி பரபரப்பை உண்டாக்கிக் கொள்கின்றனர். இதில் சோகமும் கோபமும், இத்துறை சார்ந்தவர்களே அவற்றைத் தொகுத்து வழங்குவதுதான். மென்மையுள்ளம் படைத்தவர்கள் என்பதால் ஒவ்வொரு முறையும் நடிக சமுதாயத்தினர் இலக்காக்கப்படுவது இனியும் நிகழாது. தீவிரமான எதிர்வினைகள் சாத்வீகமான முறையில் தொடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.