குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ போன்ற காமெடியை மையப்படுத்திய படங்களை கொடுத்த இயக்குநர் கல்யாண், சந்தானத்துடன் இணைந்துள்ள படம் ‘80ஸ் பில்டப்’. 80களின் நாஸ்டால்ஜியா அம்சங்களைக் கொண்டு ஃபேமிலி என்டர்டெய்னராக விளம்பரப்படுத்தப்பட்ட இப்படம் கலகலப்பை தந்ததா அல்லது கரகரவென கழுத்தை அறுத்ததா என்று பார்க்கலாம்.
80களில் தீவிர கமல் ரசிகராக இருப்பவர் சந்தானம். ஊரில் பெரிய ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவரது தாத்தா சுந்தர்ராஜன். ஜமீன் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் ஒரு பழங்கால கத்தியை திருட திட்டம் போடுகிறது மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் கும்பல். அந்த கத்தியை திருட வரும்போது அவர்களிடமிருந்து வைரங்களை கற்கண்டு என நினைத்து விழுங்கி, எதிர்பாராதவிதமாக இறந்து போகிறார் சுந்தர்ராஜன்.
இறந்துபோன சுந்தர்ராஜனின் உடலிலிருந்து வைரத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறது அந்த திருட்டு கும்பல். சந்தானத்தின் தூரத்து உறவாக சாவு வீட்டுக்கு வரும் ராதிகா ப்ரீத்தி மீது கண்டதும் காதலில் விழுகிறார் சந்தானம்.
தாத்தாவின் உடலை அடக்கம் செய்வதற்கும் தனது காதல் வலையில் நாயகியை விழ வைப்பதாக தனது தங்கையிடம் சபதம் போடுகிறார். சந்தானம் தனது சபதத்தில் ஜெயித்தாரா? மன்சூர் அலிகான் கும்பலுக்கு வைரம் மீண்டும் கிடைத்தா என்பதே ’80 பில்டப்’ படத்தின் திரைக்கதை.
இப்போது வரும் படங்களில் கதைக்கு தொடர்பு இருக்கிறதோ இல்லையோ ஆடியன்ஸின் நாஸ்டால்ஜியாவை தூண்டும் விதமாக ஏதேனும் ஒரு பழைய பாடலை இடம்பெறச் செய்வது எழுதப்படாத விதியாகிவிட்டது. அதே நினைப்பில் இந்தப் படத்துக்கு 80களில் நடப்பது போன்ற கதைக்களத்தை இயக்குநர் தேர்வு செய்தாரா என்று தெரியவில்லை. படத்துக்கும் 80களின் பின்னணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சமகாலத்தில் ஏதேனும் ஒரு கிராமத்தில் நடப்பது போன்று படத்தை எடுத்திருந்தாலும் எந்த மாற்றமும் இருந்திருக்காது.
சரி, சந்தானம் படமென்றதும், ஆடியன்ஸ் எதிர்பார்த்து வரும் காமெடி காட்சிகளாவது சிரிப்பது போல இருக்கிறதா என்று கேட்டால், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில காட்சிகள் கைகொடுத்திருக்கிறதே தவிர, பெரும்பாலானவை காமெடி என்ற பெயரில் கழுத்தறுக்கின்றன. நேரடியாக கதைக்குள் செல்லாமல் தேவைற்ற காட்சிகளால் நிரப்பப்பட்டு, 20 நிமிடங்களுக்குப் பிறகே மெயின் கதைக்குள்ளேயே படம் நுழைகிறது.
அதுவரை வரும் அண்ணன் – தங்கச்சி சண்டை, சந்தானத்துக்கும் திரையரங்க அதிபராக வருபவருக்கும் இடையே நடக்கும் சண்டை என தொடர்பில்லாமல் செல்கிறது. சுந்தர்ராஜனின் மரணத்துக்குப் பிறகு படத்தை ஓரளவு உட்கார்ந்து பார்க்க வைப்பதற்கு காரணம் ஆடுகளம் நரேனும், ‘மஞ்சக்கிளி’யாக வரும் ஆனந்தராஜும் வரும் காட்சிகள்தான்.
சந்தானம் வழக்கமாக இதுவரை என்ன செய்தாரா அதையேதான் இதிலும் செய்திருக்கிறார். சொல்லப்போனால் தனது பலமான ஒன்லைனர்களுக்காக கூட அவர் இதில் பெரிதாக மெனக்கெடவில்லை என்று தோன்றுகிறது. நாயகியாக வரும் ராதிகா ப்ரீத்தி, சுந்தர்ராஜன், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி ஆகியோர் ஒரு காமெடி படத்துக்கு தேவையானதை கொடுத்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி படம் முழுக்க வந்தாலும் அவர்களுக்கு சொல்லிக் கொள்ளும்படி ஒரு காட்சியும் இல்லை. சந்தானத்தின் தங்கையாக வருபவர் மிகை நடிப்பில் எரிச்சலூட்டுகிறார்.
‘ஆடுகளம்’ நரேன் – ஆனந்தராஜ் கூட்டணிதான் பல இடங்களில் படத்தை காப்பாற்றுகிறது. நரேனுக்கு இதுவரை இல்லாத புதிய கதாபாத்திரம். படம் முழுக்க குடிகாரராக வரும் அவர் பேசும் வசனங்களும், பெண் வேடத்தில் வரும் ஆனந்தராஜுடன் சேர்ந்து அவர் லூட்டிகளும் அதகளம். இந்த இருவர் கூட்டணி வரும் காட்சிகள் மட்டும் படத்தில் நினைவில் கொள்ளத்தக்கவையாக இருக்கின்றன.
ஜிப்ரான் இசையில் ‘ஒய்யாரி’ பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது. ஏற்கெனவே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் திரைக்கதையை இன்னும் ஐந்தடி கீழ இறக்குவிடுகின்றன பாடல்கள். பின்னணி இசையில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஜாகோப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு படத்தை கலர்ஃபுல் ஆக வைத்திருக்க உதவியுள்ளது. பாடல் காட்சிகளில் வரும் சிஜி படு சொதப்பல்.
காமெடி படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்ற லாஜிக்கே இல்லாத வாதத்தின்படி, மூளையை கழட்டி வைத்துவிட்டு படத்தை பார்த்தாலும், படத்தில் உள்ள அபத்தங்கள் அப்பட்டமாக பல்லிளிக்கின்றன. உதாரணமாக சாவு வீட்டில் சடலத்தை வைத்துக் கொண்டு செய்யும் காட்சிகள், பிணத்தை அலேக்காக தூக்கிக் கொண்டு மைதானத்துக்குச் சென்று சண்டை போடுவது, கடைசியில் பிணம் காணாமல் போவதாக வரும் காட்சி என இஷ்டத்துக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுவரை காமெடியாக சென்றுகொண்டிருந்த படத்தில் சம்பந்தமே இன்றி எதற்காக கடைசியில் ஒரு சோகப் பாடல்?
காமெடியை மையப்படுத்தி வரும் படங்கள் இவ்வாறான அபத்தக் களஞ்சியங்களாக இருப்பது தமிழில் தொன்றுதொட்டு நடந்து வருவதுதான் என்றாலும், ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு பார்வையாளர்களின் ரசனைகள் விரிவடைந்தபிறகும் திரைக்கதையை நம்பாமல் ஆங்காங்கே சிரிக்க வைக்கும் ஓரிரு காட்சிகளை நம்பி ஒரு முழு படத்தையே ஒப்பேற்றுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.