திரை விமர்சனம்: குய்கோ

சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் மலையப்பனின் (யோகிபாபு) தாய் காலமாகிவிடுகிறார், சொந்தக் கிராமத்தில். அவர் உடலை வைத்திருப்பதற்காக பிரீஸர் பாக்ஸ் கொடுக்க, அந்த மலைகிராமத்துக்குச் செல்ல நேர்கிறது தங்கராஜுக்கு (விதார்த்). இந்நிலையில் சம்பந்தமில்லாத வழக்கில் தங்கராஜையும் அவர் மாமாவையும் தேடுகிறது போலீஸ். ஊருக்குத் திரும்பினால் அவர்கள் பிடிப்பார்கள் என்பதால் சவுதியில் இருந்து மலையப்பன் வரும்வரை, அங்கேயே தங்கராஜ் தங்க வேண்டிய சூழல். ஊருக்கு வந்த மலையப்பன் என்ன செய்கிறார்? தங்கராஜை தேடும் போலீஸ் என்ன செய்கிறது என்பதை காமெடியாக சொல்கிறது, இந்த ‘குய்கோ’ (குடியிருந்த கோயிலின் சுருக்கம்!).

ஒரு சாதாரண கதையை இவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்ல முடியுமா என்று ஆச்சரியப்படுத்துகிறார், அறிமுக இயக்குநர் டி.அருள் செழியன். விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் இவர். இதில், சடலம் சுமக்கும் ‘பிரீஸர் பாக்ஸு’க்கு சென்டிமென்ட் டச் கொடுத்து திரைக்கதை அமைத்திருப்பது புதுமையாக இருக்கிறது. நாட்டு நடப்புகளைக் கிண்டலடிக்கும் வசனங்களும் கதையோடு இணைந்த டைமிங் காமெடியும் ‘குய்கோ’வின், கூல் கூட்டணி!.

“ஆடு மேய்க்கிறவரை ஆண்டவரா ஏத்துக்கிட்டாங்க, இந்த மாடு மேய்க்கிறவனை மாப்பிள்ளையா ஏத்துக்க மாட்டியா?” என்பது போன்ற வசனங்கள், கைதட்டல்களைத் தானாகப் பெறுகின்றன. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் யோகிபாபு வந்திறங்கியதும் றெக்கைக் கட்டிக்கொள்கிறது திரைக்கதை. சவுதி ரிட்டர்னாக வரும் அவர் நடவடிக்கைகள் சிரிப்பைச் சிக்கலின்றி வரவழைக்கின்றன. அவருக்கான பிளாஷ்பேக் காதலும், ‘என் பேரு மாரி’ பாடலும் சுகமான ரசனை.

பெற்ற தாய் இறந்து கிடக்கும் வீட்டில் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் மகன் இப்படி காமெடி பண்ணிக் கொண்டிருப்பாரா? தங்கராஜை போலீஸ் தேடுகிறது என்கிறார்கள். மொத்த ஊரும் போலீஸ் தலைகளாக இருக்க, தங்கராஜ் ஜாலியாக அவர்களுடன் நிற்பது எப்படி?, யோகிபாபு சென்றது சவுதியா, துபாயா? என்கிற குழப்பம் உட்பட நிறைய கேள்விகள் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றை மறக்கடிக்க வைக்கின்றன அடுத்தடுத்து வரும் தொடர் காமெடிகள்.

விதார்த் நாயகன் என்றாலும் அவர் கதாபாத்திரம் இன்னும் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கலாம். யோகிபாபு வழக்கம் போல படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். கால்குலேட்டர் சண்முகமாக வரும் இளவரசு இயல்பான நடிப்பால் நகைச்சுவையை வரவழைக்கிறார். கதாநாயகிகளாக பிரியங்கா, துர்கா என இரண்டு பேர் இருந்தும் நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை. அக்கா புஷ்பாவாக வினோதினி வைத்தியநாதன், வட்டிக்குப் பணம் கொடுக்கும் பண்பழகன் முத்துக்குமார், எல்லாவற்றிலும் காசு பார்க்கும் அந்த போலீஸ் அதிகாரி உட்பட துணை கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு மலைக்கிராமத்தின் அழகை, பசுமை மாறாமல் காட்சிப்படுத்தி இருக்கிறது. அந்தோணி தாசனின் இசையில் ‘அடி பெண்ணே உன்னை’, ‘ஏய், என் செகப்பழகி’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் கதையோடு இழுத்துச் செல்கிறது. ராம் பாண்டியனின் படத்தொகுப்பு கவனிக்க வைக்கிறது. சின்ன சின்னக் குறைகள் இருந்தாலும் ‘குய்கோ’வை குடும்பத்துடன் ரசிக்கலாம்.

Related posts