இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையிலான ‘பருத்திவீரன்’ படம் தொடர்பான பிரச்சினை தான் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இயக்குநர் சுதா கொங்கரா, எக்ஸ் தளத்தில் அமீர் குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா யூட்யூப் சேனல் ஒன்றுடனான நேர்காணலில் ‘ராம்’ படம் குறித்து பேசியுள்ளார். இந்தப் படம் அமீர் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்தை சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நடிகர் கார்த்தி, இயக்குநர் சுதா கொங்கரா உடன் தானும் பார்த்ததாக சொல்லியுள்ளார். அந்த படத்தை பார்த்தபோது ‘மேக்கிங்கும் வரலை, ஒண்ணும் வரலை’ என சுதா தெரிவித்ததாக ஞானவேல்ராஜா தெரிவித்தார்.
“பிப்ரவரி 2, 2016 அன்று அமீர் அண்ணாவிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் பிரசாத் ஸ்டூடியோவுக்கு வெளியே காரில் சென்று கொண்டிருந்தேன். இறுதி சுற்றுக்காக என்னை அழைத்து பாராட்டிய சினிமா துறையை சார்ந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார். எனக்கு அந்த தருணம் நன்றாக நினைவில் உள்ளது. அப்போது நான் அவரிடம் ஒன்று சொன்னேன்.
என் திரைப்படத்தின் மதி முத்தழகினால் ஈர்க்கப்பட்டவள் என்பது தான் அது. ஒரு ஆண் எழுதிய பலம் வாய்ந்த பெண் கதாபாத்திரங்களில் ஒன்று அது. எனது படங்களில் மதி, பொம்மி பாத்திரங்களில் நடித்த இரு நடிகைகளையும் பருத்திவீரன் படத்தை பார்க்க வைத்தேன். தமிழ் சினிமாவின் தலைசிறந்த படைப்பாளிக்கு இது நான் செலுத்தும் மரியாதை.
நான் சொல்ல வேண்டியது அவ்வளவு தான்” என சுதா கொங்கரா தெரிவித்தார்.
முன்னதாக, இயக்குநர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.