கோயம்புத்தூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஜோ-வும் (ரியோ ராஜ்) சக மாணவிசுஜித்ராவும் (மாளவிகா மனோஜ்) காதலிக்கிறார்கள். கல்லூரி முடிந்த பிறகு சொந்த ஊர்களுக்குத் திரும்பும் இவர்களிடையே, சில ஊடல்களும் விரிசல்களும் ஏற்படுகின்றன. ஆனாலும் காதல் வலுவாகத் தொடர்கிறது. சுஜித்ரா வீட்டில் காதலை எதிர்ப்பதால், தோல்வியில் முடிகிறது. அந்த மன உளைச்சலில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் ஜோ, வீட்டில் பார்க்கும் ஷ்ருதியை (பாவ்யா த்ரிகா) திருமணம் செய்துகொள்கிறார். பெற்றோர் வற்புறுத்தலுக்காகத் திருமணம் செய்துகொள்ளும் ஷ்ருதி, ஜோவை ஒதுக்குகிறாள். பதின்பருவத்தில் தன் மனதைக் கவர்ந்தவனைத் தேடிக்கொண்டிருக்கிறார். இச் சூழலில் இவர்கள் திருமண வாழ்க்கை என்னவானது என்பது மீதிக்கதை.
கல்லூரி காதல், ஊடல், விருப்பமற்ற திருமணத்தில் இணைபவர்களின் மனப்போராட்டம் ஆகியவற்றை வைத்து ரசனைக்குரிய திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் ஹரிஹரன் ராம் எஸ்.
முதல் பாதியின் பெரும்பகுதி கல்லூரி பருவ நட்பு, காதல் காட்சிகளால் கலகலப்பாக நகர்ந்துவிடுகிறது. இடைவேளையை ஒட்டிய காட்சிகளும் அதற்குப் பின் வரும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் உரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிற்பகுதியில் விருப்பமில்லாத் திருமணத்தில் இணைந்து வாழும் இணையர்களின் மனப் போராட்டம் இருவரது உணர்வுகளுக்கும் நியாயங்களுக்கும் சமமான முக்கியம் அளித்து முதிர்ச்சியுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாயகன் தற்கொலை முயற்சியில் இருந்து தப்பித்த பிறகு அவன் தந்தையும் தாயும் தனித்தனியே அவரிடம் பேசும் வசனங்கள் தற்கொலை மனநிலைக்கு எதிரான, அழுத்தமான செய்தியாகப் பதிவாகின்றன. படம் சீரியஸாக போய்க்கொண்டிருக்கும்போது அவ்வப்போது வரும் இயல்பான நகைச்சுவை பார்வையாளர்களின் மனநிலையை இலகுவாக்கிவிடுகிறது. பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பும் அவர்களின் உணர்வுகளும் கண்ணியமாகக் கையாளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
இரண்டு பாதிகளிலும் ஒரு கட்டத்துக்கு மேல் திரைக்கதையில் தொய்வு ஏற்படுகிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் திணிப்பாகத் தெரிகின்றன. நாயகன் எந்த வேலைக்கும் செல்லாமல் பெரும்பாலான காட்சிகளில் குடித்துக்கொண்டோ புகைத்துக்கொண்டோ இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இறுதியில் வரும் அந்த சின்ன ‘ட்விஸ்ட்’ ரசிக்க வைக்கிறது.
ரியோ ராஜ் பள்ளி மாணவர், கல்லூரி இளைஞர், திருமணமானவர் என அனைத்து வயதுக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறார். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் குறைசொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார். மாளவிகா மனோஜ், பாவ்யா த்ரிகா இருவரும் கொடுத்த வேலையைச் சரியாகச்செய்திருக்கிறார்கள். நாயகனின் தாயாகப் பிரவீணா, நாயகனின் நண்பர்களாக வரும் அன்புதாசன் உள்ளிட்டோர் கவனம் ஈர்க்கிறார்கள். கல்லூரியில் விளையாட்டு ஆசிரியர் கோச்சாரியாக வரும் நடிகர்,இரண்டாம் பாதியில் சில கலகலப்பான தருணங்களுக்கு உத்தரவாதம் தருகிறார். சித்து குமாரின் இசையில்பாடல்கள் இனிமை. பின்னணி இசை கதைக்குத் தேவையானதைத் தந்திருக்கிறது.
‘ஆட்டோகிராப்’, ‘ராஜா ராணி’ என பல திரைப்படங்களில் பார்த்த கதைதான். ஆனால் திரைக்கதையில் தேவையான கலகலப்பும் எமோஷனல் தருணங்களும் புன்னகைக்க வைக்கும் சின்ன சின்ன ஐடியாக்களும் நிரம்பியுள்ளன. அதுவே குறைகளை மறந்து ரசிக்க வைக்கின்றன.