வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் நினைவேந்தல் !

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) இடம்பெற்றது.

கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்றி கடலில் மிதக்க விடப்பட்டது.

இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

——-

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் ஆகிய இருவரிடமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரட்டை வாய்க்கால் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையில் கார்த்திகை பூ இருப்பதாகவும், மாவீரர் நாள் என்ற சொற்பதம் இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனவும் பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று முரண்பட்டிருந்தனர்.

அதனையடுத்து மக்களும், ஏற்பாட்டுக் குழுவினருமாக அதனை அகற்ற முடியாதெனவும் அதற்கான விளக்கத்தையும் கூறியிருந்தோம். இதனையடுத்தே குறித்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

குறித்த விசாரணை தொடர்பாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து ஒரு மணித்தியாலமாக விசாரணைகளை மேற்கொண்டு இருந்தனர்.

அவ் விசாரணையில் இரட்டை வாய்க்கால் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட கார்த்திகை பூ மற்றும் மாவீரர் நாள் என எழுதப்பட்டது தொடர்பாகவே வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தது.

நாம் நீதிமன்ற கட்டளைகளை மீறவில்லை இனியும் மீறமாட்டோம். நவம்பர் 27 எழுச்சியாக இடம்பெற இருக்கும் நாளினை பொலிஸார் திட்டமிட்டு குழப்ப வேண்டும் என ஈற்றிலே விசாரணைக்கும் அழைத்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் நாங்களும் எமது உரிமையை , நினைவு நாளினை நினைவு கூருவோம். தேவிபுரம், மாத்தளன், அளம்பில், முள்ளியவளை, முல்லைத்தீவு கடற்கரை, முள்ளிவாய்க்கால் போன்ற பல பகுதிகளில் குழப்ப நிலை ஏற்படுத்தப்பட்டது.

அத்தோடு மஞ்சள், சிவப்பு கொடிகளையே கட்ட வேண்டாம் என்ற நிலை தான் காணப்பட்டது. பொலிஸார் தாங்கள் நினைத்தது போல் , தங்களுக்கு ஏற்றால் போல் குழப்ப வேண்டும் என்ற நோக்கத்திலே செயற்படுகிறார்கள்.

முன் நின்று செய்பவர்களை பொலிஸ் நிலையம் அழைப்பதும் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதும் இடையூறுகள் ஏற்படுத்துவதுமே இவர்களது நோக்கமாகும்.

குழப்பநிலை எவ்வாறு இடம்பெற்றாலும் இறந்தவர்களது நாளினை நினைவு கூருவோம்.

அத்தோடு எமக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை (27) காலை நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

நன்றி : வீரகேசரி

Related posts