இந்தியா சிறந்தவர்களின் கரங்களில் உள்ளது” என பிரதமர் மோடிக்கு அமெரிக்க நடிகர் மைக்கேல் டக்ளஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருது, 5 கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர் ஹாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மைக்கேல் டக்ளஸ். தற்போது கோவாவில் நடைபெற்று வரும் 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு ‘சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு திரைப்பட விழா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பேசிய மைக்கேல் டக்ளஸ், “இந்த திரைப்பட விழாவில் 78 நாடுகள் பிரநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன. இதுவே இந்த விழாவின் தனித்துவம் மற்றும் அழகு என கருதுகிறேன். இது உலக அளவில் புகழ்பெற்று தாக்கம் செலுத்தும் இந்தியப் படங்களின் பிரதிபலிப்பு. இந்தியா சிறந்தவர்களின் கரங்களில் இருப்பதாக நினைக்கிறேன்” என்றார்.
மேலும், “நான் குறிப்பிட்டுள்ளபடி, அமைச்சர் அனுராக் தாக்குர் மற்றும் பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களின் தயாரிப்பு மற்றும் நிதியுதவிக்கு அதிக பணம் செலவிடப்பட்டதை அறிகிறேன். இது இந்திய படங்களுக்கு வெற்றிகரமான காலகட்டம்” என்றார்.
சாதி, மதம், இனம் குறித்து பேசுகையில், “பல்வேறு மொழிகளை பேசும் நாம் சினிமா என்ற ஒரே மொழியின் கீழ் ஒன்றிணைகிறோம். உலகில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும், மற்ற இடத்தில் என்ன நடக்கிறது என்பதை திரைப்படங்கள் மூலமாக அறிந்துகொள்ள முடியும். திரைப்படங்கள் நம்மை நெருக்கமாக்குகின்றன, அது மிக முக்கியமான அம்சம் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.