பிளவுபட்டு செயற்படுவதனால் அரசியல் ரீதியில் படுமோசமான நிலை ஏற்படும். எனவே 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இரு தேசிய தேர்தல்களை வெற்றிகொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ, எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2ஆவது தேசிய சம்மேளனம் கட்சியின் அரசியல் வெற்றிப்பாதையின் முதல் கட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2ஆவது தேசிய சம்மேளனத்தை எதிர்வரும் 15ஆம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் கட்சியின் சம்மேளனத்தில் பங்கேற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பங்காளி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இதே வேளை நடளாவிய ரீதியிலிருந்து ஆதரவாளர்களை கொழும்புக்கு அழைத்து வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் திட்டம் மற்றும் நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வற்கான திட்டம் என்பவற்றை சம்மேளனத்தின்போது வெளியிடப்படும் என்று பஷில் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இனி வரும் தேர்தல்களிலும் பெறும் வெற்றிகளை அடைவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.