பெறுமதி சேர் வரியை 18 வீதமாக அதிகரித்து மக்கள் மீது எல்லையற்ற அழுத்தங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறு போகும் போக்கில் எதிர்காலத்தில் உடல் உறுப்புகளுக்கும் ”வற்” வரி விதிக்கப்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) நிலையியற் கட்டளைகள் 27 (2) இன் கீழ் கேள்வி எழுப்பும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கடுமையான பொருளாதார நெருக்கடி ஒவ்வொரு நபரின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர அனைவரும் தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும், இதற்கான சரியான தலைமைத்துவத்தையும், மூலோபாயங்களையும் தெரிவு செய்வது ஆளும் அரசாங்கத்தின் கையிலுள்ளது.
சரியான மூலோபாயங்களைத் தெரிவு செய்யாமல்,அறிவியல் அடிப்படையின்றி திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை சரியான திசையில் கொண்டு செல்ல முடியாது.
வங்குரோத்தான நாட்டிலும் துல்லியமான தரவுகளை மறைத்து வைத்திருத்தல், அடிப்படை சட்ட கட்டுப்பாடுகளை புறக்கணித்தல்,தேவையற்ற பொருளாதார அழுத்தங்கள் மக்கள் மீது திணித்தல்,பெறுமதி சேர் வரியை 18 வீதமாக அதிகரித்து மக்கள் மீது எல்லையற்ற அழுத்தங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு போகும் போக்கில் எதிர்காலத்தில் உடல் உறுப்புகளுக்கும் ”வற் ” வரி விதிக்கப்படலாம் அறிவியல் ரீதியான தரவு இல்லாமல் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க முடியாது.
எனவே உண்மையான தகவல்களை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும். ”வற் ” வரி என்பது வறியோர், பணக்காரர் என அனைவரும் சமமாக செலுத்த வேண்டிய வரி என்றாலும்,தற்போது, அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள்,உற்பத்திப் பொருட்கள் மற்றும் திரிபோஷாக்குக் கூட ”வற்” வரி விதிக்கப்பட்டுள்ளது. வரிச்சுமை இதுவரை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் பணவீக்க விகிதம் 9.6 சதவீதமாக இருக்கும் என ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் கூறப்பட்ட போதிலும், இது 5 சதவீதம் என்றே மத்திய வங்கி கூறுகிறது.
மத்திய வங்கிக்கும் நிதி அமைச்சரின் தரவுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான முரண்பாடுகளின் அடிப்படையில் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வது சாத்தியமில்லை என்றார்.