28-ஆவது கேரள சர்வதேச திரைப்பட விழா தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று (டிச.8) தொடங்கியது.
வரும் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நானா படேகர் மற்றும் கென்ய இயக்குநர் வனுரி கஹியு (Wanuri Kahiu) கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்க முடியாத நிலையில், அவர் பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
அதில் அவர், இஸ்ரேல் – பாலஸ்தீன போர் விவகாரத்தில், பாலஸ்தீனத்துக்கான ஆதரவை வெளிப்படுத்தும் இந்தியாவின் முதல் திரைப்பட விழாவாக இவ்விழா அமையும் என்று குறிப்பிட்டார்.
“வெனிஸ், கேன்ஸ், பெர்லின் போன்ற திரைப்பட விழாக்கள் புகழ் பெற்றவை மற்றும் பழமையானவை.
அரசியல் சார்ந்த உள்ளடகங்கள் என வரும்போது கேரள திரைப்பட விழா மற்ற விழாக்களுக்கு நிகரானது.
இந்த ஆண்டு பாலஸ்தீன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் திரைப்படங்கள் இங்கே திரையிடப்பட உள்ளது இதற்கு சான்று” என்றார் பினராயி விஜயன்.
தொடர்ந்து நடிகர் நானா படேகர் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், மலையாள சினிமாவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.
இருப்பினும் இயக்குநர்கள் அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் தங்கள் வரவிருக்கும் படங்களில் தன்னை நடிக்க வைக்க உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
விழாவில் கென்ய இயக்குநர் வனுரி கஹியுவுக்கு ‘ஸ்பிரிட் ஆஃப் சினிமா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பின்னர் அவர் பேசுகையில், “சினிமா என்பது வாழ்க்கையின் காதல் மொழி. நமக்கு முன் நிறைய கதைகள் உள்ளன.
இயக்குநர்களாக அதனை வெளிப்படுத்துவதே நமது மகிழ்ச்சி. அந்தக் கதைகளை வெளிப்படுத்துவதன் மூலம், நாம் உலகளாவிய பார்வையாளர்களுடன், அவர்களின் அனுபவங்களுடன் இணைகிறோம்” என்றார்.
இந்தத் திரைப்பட விழாவில் மொத்தம் 81 நாடுகளைச் சேர்ந்த 175 படங்கள் 6 திரையரங்குகளில் உள்ள 11 திரைகளில் திரையிடப்பட உள்ளன.
இந்த விழாவில் இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி – ஜோதிகா நடித்துள்ள ‘காதல் தி கோர்’ திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை திரையிடப்பட உள்ளது.
இந்தப் படத்துக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் அரைமணி நேரத்தில் விற்றுத்தீர்ந்துவிட்டதாக படத்தில் நடித்த நடிகர் சுதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “மற்ற திரைப்பட விழாக்களை ஒப்பிடும்போது கேரள திரைப்பட விழா சிறந்த படங்களை தேர்வு செய்வதில் அதீத கவனம் செலுத்துகிறது.
காதல் தி கோர் படத்தின் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருப்பது படம் பார்வையாளர்களிடையே தாக்கம் செலுத்தியிருப்பதை உணர்த்துகிறது” என்றார்.