இலங்கை நெருக்கடியான காலகட்டத்தில் இருந்தபோது இந்தியாவிடமிருந்து 3.8 பில்லியன் டொலர் கடன் கிடைத்தது. அந்தக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு பதவி காலம் முடிவடைந்து செல்லும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பாரியதொரு பங்களிப்பை வழங்கினார். அதற்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவு பாரியளவில் நெருக்கடியடைந்தது. பலமடைந்தது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லே தனது மூன்று வருட பதவிகாலத்தை நிறைவு செய்து வெளியேறுவதுடன் அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்கவிருக்கிறார்.
இந்நிலையில், அவரது பதவிக்காலம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்த்தன இதனைக் குறிப்பிட்டார். ‘‘இலங்கை கடந்த வருடம் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்த போது இந்தியா பல்வேறு கட்டங்களில் 3.8 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியது. அதனூடாகவே இலங்கை எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது’’ என்று பிரதமர் தினேஷ் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் பொருளாதார நெருக்கடி காலத்தில் இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு டொலர் கடனுதவிகள் வழங்கப்பட்டன. 3.8 பில்லியன் டொலர்கள் கடனாக வழங்கப்பட்டது. நெருக்கடி காலத்தில் இந்தளவு பெரிய தொகையை கடனாக வழங்கிய ஒரே நாடாக இந்தியா காணப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேலும் குறிப்பிடுகையில்;
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் காணப்படுகின்ற நட்புறவை உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மேலும் நெருக்கமாக்கும் வகையில் செயற்பட்டார். அவரது பதவிக்காலத்தில் இருதரப்பு உறவு மேலும் வலுவடைந்தது. கோபால் பாக்லே இலங்கை மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டார். அதனை நாம் நன்றியுடன் நினைவுகூறுகின்றோம். மிகவும் கஷ்டமான காலத்தில் இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து உதவிகள் கிடைக்கப் பெறுவதற்கு வழி ஏற்படுத்தினார். இரண்டு நாடுகளுக்குமிடையில் பொருளாதார அரசியல், சமூக தொடர்புகள் வலுவடையும் நோக்கில் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே செயற்பட்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கோபால் பாக்லே இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்றார். அந்த வகையில் கடந்த 15ஆம் திகதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைந்தது. அவரது காலப்பகுதியிலேயே இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து மருந்துப்பொருட்கள், தடுப்பூசிகள் போன்றன இலங்கைக்கு வழங்கப்பட்டன. அத்துடன் புதுப்பிக்கதக்க சக்தி திட்டங்களுக்கான ஒத்துழைப்பு திருகோணமலை அபிவிருத்தி திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவராக பணியாற்றும் சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டிருக்கின்றார்.