வல்வையின் எஞ்சியிருந்த நமக்கு வழி காட்டிய இரண்டொரு கலங்கரை விளங்களில் ஒன்றான அப்பாத்துரை மாஸ்டர் என்ற வெளிச்ச வீட்டின் ஒளி நின்றுவிட்டது.
ஆனால் அது அணையவில்லை நமது நெஞ்சங்களில் ஏற்றப்பட்ட அகல்விளக்காக எரிய ஆரம்பித்திருக்கிறது. இது அவருக்கான கண்ணீர் அஞ்சலி மடல் அல்ல.. அவரில் நான் கண்ட திறமை அபாரமானது, என் வாழ்வை தூக்கி நிறுத்த உதவியதும் அதுதான்..
அக்காலத்தே வல்வை சிதம்பராவில் படித்தபோது ஏழாவது வகுப்பில் எமது கணித ஆசிரியராக இருந்தவர். அன்று எனக்கு கணிதம் விளங்கவில்லை. பக்கத்தில் இருக்கும் மாணவர்களை பார்த்து எழுதி ஏழாம் வகுப்புவரை காலம் ஓட்டி வந்தேன். ஆறாவது வகுப்பு வரை வகுப்பில் கடைசி மாணவனாகவும் கணிதத்தில் நிரந்தர பூஜ்ஜியம் எடுப்பவனாகவும் இருந்தேன்.
ஆறாம் வகுப்பில் கணிதப்பரீட்சையில் பூஜ்ஜியம் எடுத்த ஒரே ஒரு மாணவன் நான்தான். அதிகமானவர்களுக்கு இரண்டு புள்ளிகள் இருந்தது, ஆனால் எனக்கு அதுவும் இல்லை.
காரணம் அதில் ஒரு கேள்வி வட்டம் வரைய உதவுவது வட்டாரியா இல்லை பிரிகருவியா என்பதுதான். வட்டாரி என்று எழுதிவிட்டு பக்கத்தில் இருந்த மாணவனை எட்டிப்பார்த்தேன். ஆனால் அவன் பிரிகருவி என்று எழுதியிருந்தான். அவன் என்னைவிட கெட்டிக்காரன் அல்லவா என்று அதையும் மாற்றி எழுதினேன். சரியான பதில் தெரிந்தும் வீணாக மற்றவரை உயர்வாக எண்ண வைக்கப்பட்ட சமுதாய உணர்வு மனதில் விளையாடியதால் கிடைத்த பூஜ்ஜியம்.
வட்டரியே தெரியாதவன் என்று கருமை நிறம் கொண்ட ராமநாதன் மாஸ்டர் மாணவருடன் சேர்ந்து சிரித்தார்.. என் அந்த தவறு நடந்ததென மாணவனை கேட்டு அறிவதற்கு தகுதியில்லாத ஆசிரியக் கல்வி அவருக்கு.
ஏன்.. என்னை நானே கேட்டேன்.
ஆசிரியர் சொல்வது விளங்கவில்லை.. மறுபடியும் முதலாம் வகுப்பு போய் படித்து வரலாமா மனது கேட்டது.. ஆனால் அது முடியாது நான்தான் தேட வேண்டும், அழுதும் அவளே பெற வேண்டும், ஆரம்பித்தேன்..
அதன் பின் ஏழாம் வகுப்பில் அப்பாத்துரை மாஸ்டர் படிப்பித்ததும் விளங்கவில்லை.. இனி சக மாணவரை பார்த்து எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். நானே இரவு பகலாக தேடி ஒருவாறு அன்றைய கணிதப்பாடம் வீட்டு வேலையை செய்து சென்றேன்.
அப்பாத்துரை மாஸ்டர் பார்த்தார். கணக்கு பிழை ஆனால் ஏனோ என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் சொன்னார் இந்தக் கணக்கு பிழைதான் ஆனால் இதை நீதான் போராடிச் செய்திருக்கிறாய் என்பது தெரிகிறது. ஏனென்றால் இதன் முதல் பகுதி சரி என்றார்.
அவ்வளவுதான் என்னால் முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஓய்வில்லாத என் தேடல் ஆரம்பித்தது.. அந்தப் போராட்டமே ஒன்பதாம் வகுப்பில் அனைத்து மாணவர்களையும் முந்தி முதலிடம் வரவும், காரணமானது. மாணவனுக்:கு விளங்ப்படுத்துவது திறமை. அவனுக்கு விளங்கியிருக்கிறது என்பதைக் கண்டறிவது அபாரத்திறமை. மற்றவர்கள் ஆசிரியர்கள் அவர் ஆசிரிய மணியாக விளங்கினார்.
காலம் ஓடியது..
பத்தாவது வகுப்பில் எல்லா மாணவர்களும் சாதாரண தரத்தில் தோல்வியடைய நான் ஒருவன் மட்டுமே ஏ.எல் செல்ல முடிந்தது.. அன்று சிரித்தவர்களை பாத்து சிரித்தேன், குட்பாய் சொல்லி விடை பெற்றேன். அதற்கு அன்று வழி காட்டிய அப்பாத்துரை மாஸ்டர் காலத்தின் குரலாக சிரித்தார், இன்றும் சிரிக்கிறார்.
ஏனென்றால் இன்றும் பல சவால்கள் உண்டு, அவற்றையும் முடிக்கப் போகிறேன். அப்பாத்துரை மாஸ்டர் நேற்றும் கனவில் வந்து ஏழாம் வகுப்பில் சொன்னதையே சொல்லி, தொடர்ந்து செல் இந்த ஆக்கத்தை தவறாது எழுது என்றார், எழுதுகிறேன். இதில் பொய் இல்லை.
இரண்டாவது இன்றய காலம் போலத்தான் அன்றும் பாடசாலை ஆசிரியர்கள் அடிக்கடி வரமாட்டார்கள், அந்த நேரம் நாம் நூல் நிலையம் போய்ப் படிக்க வேண்டும்.
அன்று நூல் நிலையப் பொறுப்பாசிரியராக இருந்தவரும் அவர்தான். வல்வை சிதம்பரா நூல் நிலையம் அன்று ஓர் அதிசய சுரங்கம். வைரங்கள் புத்தகங்களாகக் கொட்டிக் கிடந்தது அங்கிருந்த ஆசிரியர்களுக்கே தெரியாத இரகசியம். ஏனென்றால் யாழ். நூல் நிலையத்திற்கு புத்தகங்கள் வர முன் அவை இந்தியாவில் இருந்து வல்வை வந்துவிடும். இந்தியாவிற்கு செல்லும் வள்ளங்களில் ஒரு கட்டாக புத்தகங்கள் வரும் சிதம்பரா நூல் நிலையம் வந்துவிடும். எல்லாவற்றையும் படிப்பேன். பின்னர் கலை உலகிலும் எழுத்துலகிலும், கற்பனையிலும் என்னுள் ஒரு நூலகம் வளர அதுவே காரணமாயிற்று. அந்த நேரம் நல்ல நூல்களை அவரே அருகிருந்து அடையாளம் காட்டினார். ஆனால் சக மாணவர்கள் அதை பாவிக்காத காரணத்தால் பாற்கடல் மீன்களாகப் போனார்கள்.
அடுத்த முக்கிய சம்பவம்..
பின்னாளில் பாடசாலையில் வசதிக் கட்டணப் பணம் அறவிடும் பணியிலும் அவர் இருந்தார். ஏழ்மையால் என்னால் அதை கட்ட முடியாது என்று அவருக்குத் தெரியும். அதைக் கட்டாவிட்டால் ஏ.எல் பரீட்சை எப்பதற்க்கு அனுமதிக்கமாட்டார்கள். ஒரு சதமும் கட்ட வேண்டாம், முழுவதையும் நீக்கி விடுகிறேன் தொடர்ந்து பரீட்சைக்குச் செல் என்றார். ஆனால் நண்பன் ஒருவனிடம் கடன்பட்டு 80 ரூபா நிலுவையையும் கட்டிவிட்டே அப்பால் சென்றேன். பணக்காரரான எனது குடும்பத்தினரிடம் உதவி கேட்டோ, பாடசாலையில் சிறப்பு சலுகை பெற்றோ முன்னேற நான் விரும்பவில்லை. ஆனால் அன்று அப்பாத்துரை மாஸ்டருக்கிருந்த மனித நேயம் நமது பாடசாலை அதிபருக்கு இருக்கவில்லை என்பதும் கவலையாக இருந்தது.
முடிந்ததா இல்லை..
எனது 17 வது வயதிலேயே கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் எனது இரண்டு நாடகங்களை மேடையேற்ற கொண்டு சென்றுவிட்டேன். கையில் பணமில்லை மனதில் நம்பிக்கை. அதற்கு வழமை போல ஊரில் பலத்த எதிர்ப்பு. ஆக்கத் தெரியாதவர்கள் விளம்பரங்களை கிழித்து வீசினார்கள். ஆனாலும் பின்வாங்கவில்லை புறப்பட்டேன் நாடகம் வெற்றி, ஆனால் மண்டபப் பணத்தை முழுமையாக கட்ட முடியாத திடீர் நிலை. அதை வெற்றிகரமாக நாமே வென்றிருக்கலாம் என்று எனக்கிருந்த நம்பிக்கையும், சாதனை வெறியும் என்னோடு வந்தவர்களிடம் இல்லை, இதனால் புகழ் இகழாக மாறியது. அன்று போஸ்டலை கிழித்தவர்கள் ஊர் வந்தபோது என்னைப் பார்த்து சிரித்தார்கள். ஏழாம் வகுப்பில் கேட்ட சிரிப்பொலி..
அன்று நடந்த கொழும்பு நாடகத்தால் துயர் சுமந்து நின்றபோது அப்பாத்துரை மாஸ்டர் வல்வை சந்தியில் கலைச்சோலை என்ற புத்தகசாலை நடத்திக் கொண்டிருந்தார். ஏன் இப்படியான நிலை என்று கேட்டுவிட்டு சிரித்தார். புரிகிறது நீ அன்று செய்த கணக்குப் போல இதையும் நீயாகவே செய்து பார்த்திருக்கிறாய். கவலைப்படாதே சரினோ தவறோ முயற்சி எடுப்பது நல்லது. செயல் திறன் இல்லாதவனை விட செயல் திறன் மிக்க நீ ஆயிரம் மடங்கு மேல் போ என்றார்.
அந்தக் காட்சி இன்றும் அழியாத கோலங்களாக மனதில் இருக்கிறது..
இதுபோல மீண்டும் இன்னொரு நாள் வந்தது, எனது மனப்பட மனிதர்கள் நூல் வெளியீட்டில் பேசினார். எனது மகள் முதல் தமிழ் பெண் விமானியான பாராட்டு விழாவிற்கு வீரசிங்கம் மண்டபம் வந்து நேரடியாக வாழ்த்தினார். கடைசியாக எனது உயிர்வரை இனித்தாய் திரைப்படம் யாழ் ராஜா திரையரங்கில் ஓடியபோது முதல் காட்சிக்கு மாலை சூடி மேள தாளத்துடன் அவரையும் அழைத்துச் சென்றேன்.
படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தவர் ஒரு கருத்தை சொன்னார். நான் பார்த்த இந்தியத் திரைப்படங்கள் போல இதுவும் இருந்தால் அது நமக்குப் பெருமையில்லை, ஆனால் அவை எல்லாவற்றையும் விட ஒர்; இடத்திலாவது சிறப்பாக இருந்தால் அதுவே பெருமை. உனது படத்தில் வந்த எழுத்தோட்டத்தை நான் பார்த்தவுடன் திருப்தியடைந்தேன். அந்த அழகிய காட்சியை நான் பார்த்த எந்த இந்தியத் திரைப்படமுமே முந்தவில்லை, ஆரம்பமே வெற்றி என்றுவிட்டு போனார். அப்படம் ஒரே தடவையில் பதினொரு விருதுகள் வென்றது, நான் சுவிஸ் நாட்டில் சிறந்த திரைப்பட இயக்குநராக தேர்வு செய்யப்பட்டேன்.. கரகோசம் கேட்டது அன்று நான் எடுத்த கணித முயற்சிக்கு அப்பாத்துரை மாஸ்டர் தந்த பாராட்டுத்தான் அப்போதும் தெரிந்தது.
அதன் பின் நான் குடாநாட்டில் சிறந்த எண் கணித ஆசிரியராக இருந்ததும், தூயகணிதத்தை டென்மார்க்கில் இலகுவாக பயின்றதும், அதை டேனிஸ் மாணவருக்கு படிப்பித்ததும் தனிக்கதை. ஆனால் கணிதம்தான் வாழ்க்கை என்பதையும் அது பைபிள், வேதம், குர்ரானைப் போல அழகான வேதம் என்பதும் அதுவே வாழ்க்கை வெற்றிக்கு மருந்து என்பதையுதம் பின்னாளில் கண்டறிந்தேன்.
இத்தனைக்கும் காரணமாக என் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்திய அப்பாத்துரை மாஸ்டரை இனி என்றுமே காண முடியாது. ஆனால் பாலைவனக் கிராமம் என்ற உலகப் புகழ் மிக்க கவிதைப் புத்தகத்தில், போரினால் ஓடிப் போனவன் தன் கிராமம் திரும்புகிறான், இறந்தவர்கள் எல்லாம் எழுந்துவந்து அவனுடன் பேசுவார்கள். இதை நான் இது எங்கள் தேசம் என்ற நாடகமாக தயாரித்திருந்தேன். எனது இளம்புயல் திரைப்படத்திலும் இது வருகிறது. இதுவரை நேரில் சென்று கண்ட அவரை இனி பாலைவனக் கிராமம் போலத்தான் ஊர் போனால் அருவமாகக் காண முடியும்.
சென்ற மாதம் அவரைப் பார்க்க ஊர் போனவன் வல்வை முத்துமாரி அம்மனை வணங்கிவிட்டு, நேரமாகிவிட்டதால் நாளை பார்க்கலாமென பார்க்காமலே திரும்பினேன். அப்போது அருகில் இருந்த ஒரு கல் என் காலில் தட்டியது. முத்துமாரி அம்மன் எதையோ சொல்கிறார் என்பதை உணர முடிந்தது. அது சாதாரண கல் அல்ல அதற்குள் ஆயிரம் செய்திகள் உண்டு. அவர் பல அபாயங்கள் சூழ்ந்திருப்பதை அவர் ஒரு கல்லால் சொன்னாலும், அப்பாத்துரை மாஸ்டர் இறந்தபோது அதுவும் அந்த கல் அடிவிழுந்ததில் இருந்ததை கண்டு கொண்டேன்.
பாலைவனக்கிராமம் என்ற ஆங்கில நூலில் வரும் இறந்துபோல ஆசிரியர் கேட்பது போல அவர் என்னிடமும் ஒரு நாள் கைகளைப் பற்றியபடி கேட்டார். இந்த ஊரை என்றுமே கைவிட்டுவிடாதே என்பதுதான் அது. கால நதி எனக்கு பல செய்திகளை தருகிறது. இப்போது நான் காலத்தை கவனத்தில் கொள்ளாது இந்த ஆக்கத்தை எழுதுவதும் அதற்காகத்தான்.
வாழ்ந்து வழிகாட்டிய அப்பாத்துரை மாஸ்டர் மறைந்தும் வழி காட்டுகிறார். இன்றும் நான் ஏழாம் வகுப்பில்தான் இருக்கிறேன்.. உன்னால் முடியும் நீ வெல்வாய் குரல் கேட்கிறது.. இன்று புதிய ஒரு கணக்கை ஆரம்பிக்கிறேன். நன்றி சேர்..
கி.செ.துரை 21.12.2023