யாழ்ப்பாண விவசாயிகளுக்கு வழங்கவென கொண்டுவரப்பட்ட 21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்குகள் அழுகிய நிலையில் காணப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணையும், விவசாயிகளுக்கான நஸ்டஈடும் அவசியம் தெரிவித்து ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.
இக்கடிதத்தில், யாழ்ப்பாணத்தில் 2023/24 பெரும்போகத்தில் விதைப்பதற்கு தேவையான விதை உருளைகிழங்குளை மானிய அடிப்படையில் வழங்குமாறு, ஏழாலை விவசாய சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கமைய யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், விவசாய அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் மற்றும் அதற்கு அதிகாரிகள் வழங்கிய பதில் கடிதங்களின் பிரதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 01.10.2023 அன்று, யாழ்ப்பாணத்தில் 2023/24 பெரும்போகத்தில் விதைப்பதற்கு தேவையான விதை உருளைகிழங்குளை மானிய அடிப்படையில் வழங்குமாறு அங்கஜன் இராமநாதனால் விவசாய அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருக்கு கடிதமூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.
11.10.2023 அன்று இதற்கான திட்ட முன்மொழிவை கோரி அமைச்சின் விவசாய அபிவிருத்திக்கான பணிப்பாளரால், மாவட்ட செயலாளர் ஊடாக மாவட்ட விவசாய பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் 20.10.2023 அன்று, விதை உருளைக்கிழங்குகள் இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் அவற்றுக்கான இருப்பு இன்மையால் குறித்த மானியத்தை விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் ஊடாக வழங்க முடியாது என ASMP திட்ட பணிப்பாளரால் கடிதமூடாக அங்கஜன் இராமநாதனுக்கு அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலையில், அண்மைய நாட்களில் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மானிய திட்டம் நிறுத்தப்பட்டதாக எழுத்துபூர்வமாக அறியத்தரப்பட்டபின்னர் ஒருமாத கால இடைவெளியில் விதை உருளைக்கிழங்குகள் இறக்குமதி செய்யப்பட்டு அவற்றை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இதன் சாத்தியத்தன்மை குறித்தும் ஆராய வேண்டியுள்ளது.
அதேநேரம், இந்த விதை உருளைக்கிழங்குகளின் மானிய விநியோகம் தொடர்பாக விவசாய அமைச்சர் கலந்து கொண்ட மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் அதிகாரிகளால் எவ்வித தகவலும் முன்வைக்கப்படவில்லை.
இதனால் குறித்த விதை உருளைக்கிழங்குகள் உரிய நடைமுறைகளை மீறி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்ததா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
ஆகையால் அடுத்தாண்டு ஆரம்பத்தில் (2024 ஜனவரி) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு முன்பாக, இவ்விடயம் தொடர்பான சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதோடு இத்தவறுகள் மீண்டும் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.
மேலும் உருளைக்கிழங்கு செய்கைக்காக தயார்படுத்திய செலவுகளை குறித்த நிறுவனத்திடம் இருந்து பெற்று இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதுடன், அவர்கள் இந்த பருவகாலத்தில் மாற்றுப்பயிர்களை பயிரிடுவதற்கான உதவிகளை விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.