சட்டவிரோதமாக எல்லையை தாண்டிச் செல்லும் பயணம் ‘டன்கி’ (Dunki) என்று அழைக்கப்படுகிறது. அப்படியாக உயிரைப் பணயம் வைத்து வேறொரு நாட்டில் தஞ்சம் புகும் மக்களின் வலியையும், அதற்கு எழும் தேவையையும் பேசுகிறது ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியாகியுள்ள ஷாருக்கானின் ‘டன்கி’.
பஞ்சாபில் உள்ள லால்டு (Laltu) என்ற கிராமத்தில் வாழ்ந்து வரும் மன்னு (டாப்ஸி), புக்கு (விக்ரம் கோச்சார்), பல்லி கக்கட் (அனில் குரோவர்) ஆகிய மூவரும் வெவ்வேறு வகையில் பணப் பிரச்சினையில் சிக்கி தவிக்கின்றனர். தங்கள் குடும்பத்தை காப்பாற்றவும், பணப் பிரச்சினையிலிருந்து மீளவும் லண்டன் செல்ல முடிவெடுக்கின்றனர். இவர்களுடன் ராணுவ அதிகாரியான ஹார்டி சிங்கும் (ஷாருக்கான்) இணைந்து கொள்கிறார். பணம், மொழிப் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் விசா மறுக்கப்பட, சட்டவிரோதமாக ‘டன்கி’ முறையில் பயணம் மேற்கொள்ளும் இவர்கள் லண்டன் சென்றனரா, இல்லையா? இறுதியில் என்ன நடந்தது என்பதே திரைக்கதை.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் படம் வெளியாகியிருக்கிறது. ‘3 இடியட்ஸ்’ படத்தில் இந்திய கல்வி முறைக்கு எதிராக கேள்வி எழுப்பியவர், தற்போது வறுமையின் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் மக்களின் சட்டவிரோத குடியேற்றம் குறித்தும் அதிலுள்ள சிக்கல்கள் குறித்தும் பதிவு செய்திருக்கிறார். லண்டன் நீதிமன்றத்தில் நடக்கும் உரையாடலில், “போரால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு மட்டுமே எங்கள் நாட்டில் விசா கொடுப்போம்” என நீதிபதி கூற, “போரில் கொல்லப்படுவதும், பசியில் சாவதும் ஒன்று தான். எனவே, வறுமையில் உள்ளவர்களுக்கு விசா கொடுக்கும் வகையில் விதிகளை மாற்றியமைக்க வேண்டும்” என ஷாருக்கான் பேசும் இடம் ராஜ்குமார் ஹிரானி சொல்ல வரும் மொத்த கதைக்கான மையப்புள்ளி.
‘பதான்’, ‘ஜவான்’ படங்களில் துப்பாக்கி, தோட்டா, வன்முறை, மாஸ், ஆக்ஷனாக பார்த்து சலித்த ஷாருக்கானை முற்றிலுமாக தன்னுடைய ஸ்டைலுக்கு மாற்றி ரசிக்க வைத்திருக்கிறார் ஹிரானி. அவரது டைமிங் காமெடியாகட்டும், டாப்ஸியிடம் புரொபோஸ் செய்யும் இடம், நீதிமன்றத்தில் எமோனஷனலாக பேசுவது, க்ளைமாக்ஸ் காட்சியில் செய்யும் அதகளம் என நடிப்பில் பாட்ஷா என்பதை நிரூபிக்கிறார். இந்த ஆண்டு வெளியான மற்ற இரண்டு படங்களைப் போலவே இந்தப் படத்தில் தனது தேசபக்தியை பறைசாற்றுகிறார்.
டைட்டில் கார்டில் ஷாருக்கானுக்கு முன்பாக டாப்ஸியின் பெயர் வருவது பாராட்டத்தக்க மாற்றம். அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் டாப்ஸி. சிறப்புத் தோற்றத்தில் சிறிது நேரம் வந்தாலும் அழுத்தமாக கதாபாத்திர நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் விக்கி கவுஷல். விக்ரம் கோச்சார், அனில் குரோவர், போமன் இரானி யதார்த்தமான நடிப்பில் கவனம் பெறுகின்றனர்.
அழுத்தமான கதைக்களம்தான் என்றாலும், அதனை எந்த அழுத்தமில்லாமல் மேம்போக்காக சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய சிக்கல். அதேபோல தொடக்கத்தில் நகைச்சுவையாக கதையை நகர்த்துவது சுவாஸ்யம் கொடுத்தாலும், அடுத்தடுத்து எமோஷனல் காட்சிகளிலும் அதே நகைச்சுவை படர்ந்திருப்பது போன்ற உணர்வால் அந்த காட்சிகள் முழுமையான தாக்கத்தை செலுத்தவில்லை. குறிப்பாக, விக்கி கவுஷல் லண்டன் செல்லவதற்கு சொல்லும் காரணமும், போகமுடியாத வலியும் அவருக்குத்தான் கஷ்டமாக உள்ளதே தவிர, பார்வையாளர்களுக்கு அது துளியும் பாதிப்பை ஏற்படுத்ததால் அவர் இழப்பு நமக்கு கடத்தப்படுவதில்லை. அதையொட்டி ஷாருக்கானின்
‘ஆவேச வசனமும் எடுபடவில்லை.
எல்லாமே அவசர அவரசரமாக நகர்வதால் காட்சியில் முழுமைத்தன்மை கிட்டாமல் கடக்கிறது. குறிப்பாக, ‘டன்கி’ பயணக் காட்சிகள் மிகச் சொற்ப தடைகளுடன் முடிந்துவிடுகிறது. அதையுமே ஷாருக்கான் சரிகட்டி விடுவதால் படத்தின் அச்சாணியான ‘டன்கி’ பயணமே ஆட்டம் கண்டுவிடுகிறது. ‘3 இடியட்ஸ்’ படத்தில் படிக்காதவர்களை மீட்கும் ஆமீர்கான் போல, இப்படத்தில் லண்டன் செல்பவர்களின் ஆசையை நிறைவேற்றும் மீட்பர் ஷாருக்.
காமெடி கைகொடுத்த அளவுக்கு எமோஷனல் காட்சிகள் கைகொடுக்காமல் போனதுதான் படத்தையும், பார்வையாளரையும் இரண்டாக பிரித்து வைக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் மக்கள் டன்கி பயணத்தை மேற்கொள்வதாகவும், அதில் பலர் இறந்துவிடுவதாகவும், படம் சொல்கிறது. ஆனால் ‘சொல்லிக்கிட்டே இருந்தா எப்டி அடிச்சுக்காட்டு..’ என்பது போல அதற்கான அழுத்தமான காட்சி எங்கே? எனினும், க்ளைமாக்ஸ் காட்சிகள் ஆறுதல். ப்ரிதம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய அளவில் ஈர்க்காமல் போனது சோகம்.
தேர்ந்த ஒளிப்பதிவு படத்தின் குவாலிட்டியை கூட்டுகிறது. ராஜ்குமார் ஹிரானியே படத்தொகுப்பும் செய்துள்ளதால் காதல், சட்டவிரோத பயணம், குடியேற்றம், வறுமை என எல்லாவற்றையும் ஒரே படத்தில் சொல்லி தேவைக்கு அதிகமாக இழுத்திருக்கும் உணர்வு எழுவதை தவிரக்க முடியவில்லை. வயதான காட்சிகளில் வரும் ஷாருக், டாப்ஸியின் சிகை அலங்காரம் பிசிறு தட்டுகிறது.
டன்கி, வெளிநாடு செல்ல கனவு காணும் எளிய மக்களின் பிரச்சினையை மையப்படுத்திய படம். ஆனால், அதன் ஆன்மாவான எமோஷனல் டிராமாவுக்கு உரிய நியாயம் சேர்த்ததா அல்லது சுவாரஸ்யமாவது கூட்டியதா என்பதுதான் கேள்விக்குறி.