தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில் நடிகை திரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமென கூறிய நீதிபதி எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? எனவும் மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். நடிகராக இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில் பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதி பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துமாறு அவரது வழக்கறிஞர் குரு தனஞ்ஜெயிடம் கூறினார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு என்றும்,நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் ஐகோர்ட்டு தெரிவித்தது.