உலகளாவிய ரீதியில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் யூத மற்றும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வும், அதனை அடிப்படையாகக்கொண்ட வன்முறை மற்றும் ஒடுக்குமுறைச் சம்பவங்களும் மேலோங்கிவருவதாக இனவழிப்பைத் தடுத்தல் தொடர்பான ஐ.நா விசேட ஆலோசகர் அலைஸ் வைரிமு டேரிடு மற்றும் மதச்சுதந்திரம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் நஸிலா கனே ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதுமாத்திரமன்றி ஆபத்தை விளைவிக்கக்கூடியவகையில் மத ரீதயிலான வெறுப்புணர்வை வெளிப்படுத்தல் மற்றும் சகிப்புத்தன்மையின்மையின் விளைவாக தனிநபர் அல்லது சமூகத்தின் மத்தியில் ஆழமான காயத்தைத் தோற்றுவித்தல் போன்றவற்றை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் மேலோங்கிவரும் யூத மற்றும் இஸ்லாமிய வெறுப்புணர்வுப் போக்கு தொடர்பில் அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
மதரீதியிலான சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது உரிமைகளை சமத்துவமான முறையில் அனுபவிப்பதையும், செயற்திறன்மிக்க வகையில் பாதுகாப்பைப் பெறுவதையும் உறுதிசெய்வதற்கான உடனடி நடவடிக்கைகள் அனைத்துத் தரப்பினராலும் முன்னெடுக்கப்படவேண்டும்.
உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பைப் பிரதிபலிக்கக்கூடியவகையில் பரவலாகப் பதிவாகிவரும் சம்பவங்கள் தொடர்பில் அரசுகள், ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு அமைவாகச் செயற்படவேண்டியது அவசியமாகும்.
உலகளாவிய ரீதியில் அண்மைய சில மாதங்களாக அதிகரித்துவருகின்ற, அதிலும் கடந்த சில வாரங்களில் எச்சரிக்கை சமிக்ஞையை வழங்கும் மட்டத்தை அடைந்திருக்கின்ற மத ரீதியான அல்லது நம்பிக்கை அடிப்படையிலான வன்முறைகள், ஒடுக்குமுறைகள், மீறல்கள் என்பன மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், பல சமூகங்களின் மத்தியில் மிகுந்த அச்சத்தைத் தோற்றுவித்திருக்கின்றது. சில நாடுகளின் தேசிய கட்டமைப்புக்களும், சிவில் சமூக அமைப்புக்களும் அந்நாடுகளில் இஸ்லாமிய மற்றும் யூத எதிர்ப்பு சடுதியாக அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளன. அதுமாத்திரமன்றி ஏனைய மத ரீதியிலான சிறுபான்மை சமூகங்களும் குறிப்பிடத்தக்களவிலான, முன்னெதிர்வுகூறப்படமுடியாத பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்துள்ளன.
பல நாடுகளில் பள்ளிவாசல்கள், யூதர்களின் வணக்கஸ்தலங்கள், கல்லறைகள் போன்றவற்றின்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அவை முற்றுமுழுதாக நிர்மூலம் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சொந்தமான சொத்துக்கள், வீடுகள், பாடசாலைகள், கலாசார நிலையங்கள், நினைவுத்தூபிகள் என்பவற்றின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும் மத அடிப்படையில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், சிறுவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் அச்சுறுத்தல்களுக்கும், அத்துமீறல்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். மத ரீதியான வெறுப்புணர்வும், வன்முறையைத் தூண்டக்கூடியவாறான கருத்துக்களும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டுவருகின்றன. அரசியல் ரீதியில் மிதமிஞ்சிய குழப்பத்தைத் தோற்றுவிக்கக்கூடியவாறான அமைதியின்மை நிலை தோற்றம்பெறும்போது அது உடனடியாக நிறுத்தப்படுவதுடன், அனைவருக்குமான மனிதாபிமானத்துக்கு மதிப்பளிக்கப்பட்டு, சமத்துவமும், நீதியும் நிலைநாட்டப்படவேண்டும்.
ஆபத்தை விளைவிக்கக்கூடியவகையில் மத ரீதயிலான வெறுப்புணர்வை வெளிப்படுத்தல் மற்றும் சகிப்புத்தன்மையின்மையின் விளைவாக தனிநபர் அல்லது சமூகத்தின் மத்தியில் ஆழமான காயத்தைத் தோற்றுவித்தல் போன்றவற்றை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ பின்பற்றுவதற்காக எந்தவொரு நபரும் அச்சமடையவோ, துன்பப்படவோ கூடாது. தமது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படும் அதேவேளை, பாதுகாப்பாக உணர்வதற்கான உரிமை சகலருக்கும் உண்டு.
இவ்வாறானதொரு பின்னணியில் மதம் அல்லது நம்பிக்கை சார்ந்த உந்துதலைக் கொண்டிருக்கக்கூடிய அனைத்து வன்முறை, ஒடுக்குமுறை மற்றும் மீறல் சம்பவங்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சகல நாட்டு அரசாங்கங்களையும் வலியுறுத்துகின்றோம். அதுமாத்திரமன்றி அரசாங்கங்கள் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட நியமங்களுக்கு அமைவாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று இந்த இருண்ட தருணத்தில் சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினர் மற்றும் மதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு மிகமுக்கிய பங்குண்டு என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.