என் அப்பா சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் அன்று நான் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அனைத்தும் கவனித்து கொண்டவர் விஜயகாந்த் அண்ணன்தான்” என்று நடிகர் பிரபு கூறியிருக்கிறார்.
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவை அடுத்து அவர் குறித்த நிறைய வீடியோக்கள், சம்பவங்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த 2001-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறந்தபோது அவரின் இறுதி ஊர்வலத்தில் இருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தை தனியொரு ஆளாக விஜயகாந்த் கட்டுப்படுத்திடும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலம் சென்னை தி.நகர் சௌத் பார்க் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானம் வரை நடந்தது. இந்த இறுதி ஊர்வலத்தில் திரைப் பிரபலங்கள் உடன் ரசிகர்களும் கலந்துகொண்டனர். இதனால் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் குவிந்தது.
அப்போது, அதிகமான கூட்டத்தால் சிவாஜி கணேசன் வீட்டருகே நெருக்கடி ஏற்பட, இறுதி ஊர்வலம் நகர முடியாமல் இருக்கும். அந்தத் தருணத்தில் தனியொருவராக இறங்கி கூட்டத்தை கலைத்து ஊர்வலம் செல்ல வழிவகுப்பார் விஜயகாந்த். சிவாஜி இறந்த சமயத்தில் நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த், சிவாஜியின் இறுதி ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜயகாந்த் மறைந்துவிட்ட நிலையில் அவரின் துணிச்சலையும், களச்செயல்பாட்டையும், தலைமைப் பண்பையும் வெளிப்படுத்தும் நோக்கில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபுவின் நன்றிக்கடன்: இதனிடையே, இன்று குடும்பத்துடன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் பிரபு, “என் அப்பா சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் அன்று நான் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அனைத்தும் கவனித்து கொண்டவர் விஜயகாந்த் அண்ணன்தான். நான் செய்ய வேண்டிய கடமையை அன்றைக்கு விஜயகாந்த் அண்ணன் செய்தார்.
அன்று கடைசிவரை நின்று சிவாஜியை நல்லடக்கம் செய்தபிறகு என் அம்மாவைப் பார்த்து எல்லாத்தையும் ஒப்படைத்து விட்டுத்தான் சென்றார். விஜயகாந்தும் சிவாஜிக்கு ஒரு மகன்தான். அந்த நன்றிக்காக எனது குடும்பத்துடன் வந்து அவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அவரை நல்லடக்கம் செய்து அஞ்சலி செலுத்துகிறோம்” என்று உருக்கமாக கூறினார்.