வெட் வரியை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரிகள் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வெட் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரியும் 3 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, அழைப்புக் கட்டணம், இணையச் சேவைக் கட்டணம், கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் போன்ற அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சில முற்கொடுப்பனவு அட்டைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படாத போதும், அதற்காக வழங்கப்பட்ட டேட்டா கோட்டாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா கருத்து தெரிவிக்கையில், வெட் வரி காரணமாக தமது வர்த்தகத்தை முன்னெடுத்து செல்வதில் பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக குறிப்பிட்டார்.
——-
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,
சர்வதேச நீதிக்காக போராடி வரும் நாம் பல வருடங்கள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஏமாற்றத்திற்குள்ளாகி வருகின்றோம்.
அத்துடன் இலங்கை அரசின் ஆணைக்குழுக்கள் மீதும் அதன் விசாரணைகள் மீதும் நாம் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளோம். இந்த நாட்டில் உள்ளவர்களே போரை உருவாக்கி தமிழர்களை அழித்தார்கள். எனவே அவர்களால் உருவாக்கப்படும் ஆணைக்குழுக்கள் மீதும் அலுவலகங்கள் மீதும் எமக்கு துளியும் நம்பிக்கை இல்லை.
இழப்பீடு வழங்குவதும், மரணச்சான்றிதழ் வழங்குவதுமே அவர்களது நோக்கமாக உள்ளது. எமக்கு அது தேவையில்லை. எமது உறவுகளே தேவை. 12 ஆணைக்குழுக்களுக்கு மேல் அமைத்து விட்டார்கள். அனைத்துமே ஏமாற்று நாடகம்.
எனவே பிறக்கின்ற புதிய வருடத்திலாவது எமக்கான நீதியை வழங்குவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் எனத் தொழவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 12 ஆணைக்குழுக்களுக்கு மேல் ஏமாற்று நாடகம், ராஜபக்ஸ குடும்பம் பேரக் குழுந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாம் பேரக் குழந்தைகளை தேடி வீதியில் நிற்கிறோம், குடும்பங்களாக சரணடைந்த போது அவர்களுடன் சரணடைந்த 29 குழந்தைகள் எங்கே” என எழுதப்பட்ட அரசிற்கு எதிரான பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களை எழுப்பியிருந்தனர்.