இயல்பான திரைப்படங்கள்தான் மலையாள திரை உலகின் ஆகச்சிறந்த பலம். பெரும்பாலும் நாயக துதி இல்லாத மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை இயல்பாக கையாள்வதில் அவர்கள் கைத்தேர்ந்தவர்கள். அந்த வகையில் 2023-ம் ஆண்டு மலையாளத் திரையுலகம், அறிமுக இயக்குநர்களுக்கான ஆண்டாக அமைந்திருந்தது. இந்த இயக்குநர்கள் அனைவருக்குமே வெற்றி நோக்கிய பாதைக்கான வழிகள் தெரிந்திருந்தது. அதற்காக அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே வெற்றி பெறவில்லை. இருப்பினும், ஒரு சில படங்கள் திரையரங்குகள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்திருந்தன. அந்த வகையில் மலையாளத்தில் அறிமுகமான இயக்குநர்கள் பலரும் 2023-ல் தங்களுக்கான முத்திரையைப் பதித்திருந்தனர் .
அறிமுக இயக்குநரான ஜித்து மாதவனின் ‘ரோமாஞ்சம்’ படம் மலையாள சினிமாவுக்கு இந்த வருடத்தினை மிகச் சிறப்பானதாக துவக்கிவைத்தது. மிக நேர்த்தியாக கதை சொன்ன பாங்கும், பார்வையாளர்களை பதைபதைப்புடன் வைத்திருக்கச் செய்த நடிப்பென படத்தை எங்கேஜிங்காக இயக்குநர் கடத்தியிருந்தார். நகைச்சுவை கலந்து நுட்பமாக சஸ்பென்ஸ் உடன் ஜித்து மாதவன் கதை சொன்ன விதம் பலரையும் வெகுவாக ஈர்த்திருந்தது.
அதுமட்டுமின்றி, இந்த ஆண்டில் மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க சாதனையையும் இப்படம் படைத்தது. விழாகால சலுகைகளில் விற்றுத்தீரும் பொருட்களைப் போல இந்தப் படத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால், கூடுதலான திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த ஆண்டில் அதிகம் வசூலித்த மலையாளப் படம் என்ற சாதனையை வைத்திருந்தது. ஆனால், 2018 திரைப்படம் இச்சாதனையை முறியடித்துவிட்டது.
ஸ்லோ பர்னிங் காட்சிகளை அதிகம் கொண்ட மலையாள சினிமாவின் வழமைக்கு மாறாக காட்சிக்கு காட்சி சரவெடி பட்டாசை வெடிக்க செய்த படம் ‘ஆர்டிஎக்ஸ்’. அறிமுக இயக்குநரான நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் வெளிவந்த இந்த அதிரடி ஆக்சன் திரைப்படமான இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படத்தில் வரும் சண்டைக் காட்சிகளும், பின்னணி இசையும் படம் பார்க்க தியேட்டருக்கு வந்தவர்களுக்கு உற்சாகத்தை தந்தது. ஓணம் பண்டிகையின் போது வெளியான, ‘ஆர்டிஎக்ஸ்’ படத்துக்கு கேரளாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஆடியன்ஸுக்கு டெடனேட்டர்களைப் போல வெடிக்கச் செய்ததன் மூலம், நஹாஸ் ஒரு அறிமுக இயக்குநராக தனித்துவமான தனது திறமையை வெளிப்படுத்தினார். மேலும் இந்தப் படம், உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது, கேரளாவில் இருந்து மட்டும் ரூ.50 கோடி வசூலித்திருந்தது. இந்த குறிப்பிடத்தக்க சாதனை மூலம் ‘புலிமுருகன்’, ‘லூசிஃபர்’ மற்றும் ‘2018’ திரைப்படங்களின் வரிசையில் எலைட் கிளப்பில் இணைந்த நான்காவது மலையாளப் படமானது ‘ஆர்டிஎக்ஸ்’. இப்படத்தில் வந்த ‘நீல நிலவே’ பாடல் கேரளம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இளைய பட்டாளங்களின் மனதுக்கு நெருக்கமான பாடலாக மாறியது.
அந்த வரிசையில், ராபி வர்கீஸ் ராஜ் இயக்கிய க்ரைம் த்ரில்லர் திரைப்படமான ‘கண்ணூர் ஸ்குவாட்’ இந்த ஆண்டு மலையாள திரையுலகில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றது. வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக, கண்ணூரின் முன்னாள் காவல் துறை அதிகாரி ஸ்ரீஜித்தால் உண்மையாகவே உருவாக்கப்பட்டதுதான், 4 பேரைக் கொண்ட ‘கண்ணூர் ஸ்குவாட்’. அந்தக் குழு 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் விசாரித்த இருவேறு வழக்குகளைத் தழுவி இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநரான ராபி வர்கீஸ் ராஜ் எடுத்திருந்தார்.
போலீஸ் கதை என்பதால் நிறைய ட்விஸ்ட் அண்ட் டர்னஸ் எல்லாம் வைத்து பார்வையாளர்களை குழப்பாமல், கதை சொல்லியிருந்த விதம் பார்வையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல நேர்த்தியான கதாப்பாத்திரங்களின் தேர்வும், மம்மூட்டி என்ற பிரதான பாத்திரத்தின் பங்களிப்பை சரியான முறையில் கையாண்ட விதமும், திரையரங்குக்கு படம் பார்க்க பார்வையாளர்களை மீண்டும் கொண்டு வந்து சேர்த்ததில் இந்தப்படம் மிக முக்கிய பங்காற்றியது. வாசிக்க > அதே மம்மூட்டிதான் ஹீரோ! – தந்தை இழந்ததை மீட்ட மகன்களின் அசாத்திய ‘சக்சஸ்’ கதை
மலையாள திரையுலகில் பெண்களின் பங்களிப்பு அசாத்தியமானது. அதேநேரம் பெண் இயக்குநர்களின் படைப்புகள் அடிக்கடி வருவதும் இல்லை. இந்த குறையை போக்கியது, ஆடை வடிவமைப்பாளராக இருந்து, இயக்குநராக அறிமுகமான ஸ்டெபி சேவியர், இயக்கத்தில் வெளிவந்த ‘மதுரம் மனோகரா மோகம்’ திரைப்படம். படத்தில், பாசாங்குதனங்களை கேலி செய்திருப்பதுடன், முதலாளித்துவத்துக்கு எதிரான கருத்துகளை ஆணித்தரமாகப் பதிவு செய்திருந்தார் ஸ்டெபி. இதனால் மக்களின் பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றது இந்த திரைப்படம். சொல்லிக் கொள்ளும்படியான வசூலை ஈட்டிய இந்த திரைப்படத்துக்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்கள் இயக்குநர் ஸ்டெபி சேவியரின் இருப்பை மலையாள திரை உலகில் உறுதி செய்திருந்தது.
மலையாளத் திரை உலகில் ஃபீல் குட் சினிமாக்களின் மாஸ்டராக அறியப்படுபவர் இயக்குநர் சத்யன் அந்திகாட். அவரது மகன் அகில் சத்யன் இயக்குநராக இந்த ஆண்டு அறிமுகமானார். அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘பாச்சுவும் அல்புத விளக்கும்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வசூலை ஈட்டவில்லை. என்றாலும், நகைச்சுவை கலந்த லைட் ஹார்ட்டடு ஃபேமிலி டிராமாவான இத்திரைப்படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸ்களிடம் சிறப்பான வரவேற்பு இருந்தது. அந்த வரவேற்பும், அன்பும் அகில் சத்யனுக்கு ஒரு இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு தளத்தை உருவாக்கித் தந்தது.
மலையாளத்தில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் துல்கர் நடிப்பில் வெளியான ‘கிங் ஆஃப் கொத்தா’. கணிசமான பட்ஜெட் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்களின் தேர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஓணம் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் வெளியான இப்படம், விமர்சகர்களின் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ஏமாற்றத்தைச் சந்தித்தது.
படத்தின் இயக்குநர் அபிலாஷ் ஜோஷி தனது பணியை நியாயமாக செய்திருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக, அவரது முதல் திரைப்படம் மலையாள ரசிகர்களிடம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மலையாளத் திரையுலகில் ஆக்ஷன் த்ரில்லர் படங்களின் முன்னோடியாகக் கருதப்படும் அவரது தந்தை ஜோஷியின் பாரம்பரியத்தை நிலைநிறுத்த அபிலாஷ் இன்னும் அதிக முயற்சியை எடுத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இப்படத்தின் தோல்வி உணர்த்தியிருந்தது.
இவர்களைத் தவிர்த்து மலையாளத்தில் இந்த ஆண்டு அறிமுகமாயிருந்த மேலும் பல இயக்குநர்கள் தங்களது திறமையை வித்தியாசமான படைப்புகளின் மூலம் நிரூபித்திருந்திருந்தனர். விஷ்ணு பரதன் தனது புதுமையான கதைசொல்லல் மூலம் ‘பீனிக்ஸ்’ என்ற திகில் வகை திரைப்படத்தைக் கொடுத்திருந்தார். மகிழ்ச்சியும் நகைச்சுவையும் கலந்த நிதிஷ் சஹாதேவின் ‘ஃபாலிமி’ திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்தன. இந்த வரவேற்பு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் இயக்குநருக்கு நம்பிக்கைக்குரிய இடத்தைப் பெற்றுத் தந்தது.
மிதுன் மானுவேல் தாமஸ் உடன் இணைந்து அருண் வர்மாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘கருடன்’ ஒரு கிரைம் த்ரில்லர் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தந்திருந்தது. அதேபோல், ‘இரட்டா’ படத்தின் மூலம் ரோஹித் எம்.ஜி. கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமானார். மனசாட்சியை உலுப்பும் க்ரைம் டிராமாவான இப்படத்தின் மேக்கிங் மற்றும் இயக்கம் அறிமுக இயக்குனருக்கு வழக்கமான எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட முதிர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு அழுத்தமான படைப்பாக பார்க்கப்பட்டது. வாசிக்க > ஓடிடி திரை அலசல் | Iratta – இரட்டையரின் சிதைக்கப்பட்ட குழந்தைப் பருவ தாக்கமும் முடிவுகளும்!
மேலும் அமீர் பள்ளிக்கல் இயக்கிய ‘ஆயிஷா’ வினீத் வாசுதேவனின் ‘பூவன்’, அமீன் அஸ்லாமின் ‘மோமோ இன் துபாய்’, ஆதித்தன் சந்திரசேகரரின் ‘எங்கிலும் சந்திரிகே’, ஆல்வின் ஹென்றியின் ‘கிறிஸ்டி’, முஹாஷினின் ‘கதின கதோரமே அந்தகதாஹம்’, ஆல்ஃபிரட் டி’சாமுவேலின் ‘ஓ மை டார்லிங்’, ஷமல் சுலைமானின் ‘ஜாக்சன் யூத் பஜார்’, ரசூல் பூக்குட்டியின் ‘ஒட்டா’ மற்றும் சியாம் சசியின் ‘வேலா’ ஆகியவை என இந்த ஆண்டு மலையாளத்தில் அறிமுக இயக்குநர்களின் திரைப்படங்கள் வரிசைக்கட்டி இறங்கின.
இவ்வாறு ஒவ்வொரு அறிமுக இயக்குநரும் மலையாளத் திரை உலகில் தனித்துவமான மற்றும் நம்பிக்கைக்குரிய படங்களின் மூலம் தடம் பதித்தனர். ஒருசில அறிமுகப் படமே மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கலாம், சிலருக்கு வெற்றி கிடைக்காமலும் இருந்திருக்கலாம். ஆனால், முதல் படம் கற்றுத் தந்த பாடங்களுடன் வெற்றிக்கான வழிகளை அவர்கள் சரியாக கண்டுணர்ந்து பயணிக்கத் தொடங்கும்போது அவர்களது வருங்கால படைப்புகள் நிச்சயம் வெற்றியுடன் சேர்த்து உற்சாகத்தையும் கொடுக்கும். புதுமையும் திறமையும் நிறைந்த இப்புதியவர்களின் வருகை மலையாள சினிமாவின் எதிர்காலத்தை மேலும் பிரகாசமாக்கி இருக்கிறது.