உலகத்தை கற்றுத்தந்த உன்னதமான ஆண்டு 2023
இந்த ஆண்டு என் வாழ்வில் தந்த சிறப்புக்கள் என்ன ? இழப்புக்கள் என்ன ? என்ற கோணத்தில்தான் மனிதன் ஆண்டுகளைப் பார்க்கிறான். ஆனால் ஆண்டை நாம் வேறு விதமாகப் பார்க்க வேண்டும்.
ஆண்டு சொல்லும் முதல் செய்தி எப்போதுமே அது விடை பெறுகின்றபோது வரலாறாகவே விடை பெறுகின்றது. ஆனால் அந்த ஆண்டில் விடை பெற்ற மனிதர்கள் எல்லோருமே அந்த ஆண்டைப் போல வரலாறாவதில்லை.
வரலாற்றை ஆள்வதால் அது ஆண்டு என்று பெயர் பெறுகிறது, ஆண்டுவிட்டு நிறைவடைகிறது.
வெறும் 365 நாட்கள் மட்டும் வாழ்ந்தாலும் என்ன அதிசயம் அது தன்னை வரலாறாகிவிடுகிறது.
இந்த வரலாற்று பெருமை மிக்க ஆண்டில் நாம் புரிய வேண்டியது என்ன..? வருடம் என்பது வந்து போவதல்ல அது ஒரு கல்வி, பாடப்புத்தகம். நாம் கற்காத வருடங்கள் எல்லாமே படிக்காத புத்தகங்களாகிவிடும்.
மனதில் கவி எழுதிய 2023 என்ற அழகிய புத்தகத்தில் நாம் படித்தது என்ன..? கடந்து போன 2022 ஐ விட இதில் நாம் கற்றுக்கொண்ட அதிக புதுமைகள் எவை..? நாம் முன்னேறியிருக்கிறோமா.. அதே செக்கு மாடுகளாக சுற்றியிருக்கிறோமா என்று எடை போட வேண்டும்.
என் வாழ்வில் ஒவ்வொரு வருடத்தையும் ஒவ்வொரு புத்தகமாகவே படிக்கிறேன். அதை மனம் என்ற நூல் நிலையத்தில் பத்திரமாக வைக்கிறேன். ஒரே நொடியில் எடுத்துப் படிக்கும் புத்தகம் போல ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பேன். ஒரு நொடி கூட மறந்திருக்கமாட்டேன்..
அன்றாடம் ஓர் அழகிய நாவல் போலவே கடந்து போன வருடங்களை வாசிக்கிறேன். ஏன் என்று கேட்கிறேன். அதில் வந்து போன மனிதர்கள், நிகழ்வுகள், நவரச பாவங்கள், உணர்வுகள் எல்லாவற்றையும் ஒன்று கூட்டிப் பார்க்கிறேன். அப்படிப் பார்க்கையில் 2023 இதுவரை நான் படித்த வருடங்கள் என்ற நாவல்களில் நல்லதோர் நாவலா என்று தங்கம் நிறுத்தது போல நிறுத்துப் பார்க்கிறேன்.
உண்மையில் 2023 ஐ போல நான் படித்த நல்ல நாவல் என் வாழ்வில் எதுவும் இல்லை, இது அத்தனையும் சேர்த்து காலம் எழுதிய அற்புதமான கவிதையாக தெரிகிறது. ஒரு மாபெரும் கவிஞன் எழுதிய படைப்பு..
இந்த ஆண்டை மறந்து இன்னொரு ஆண்டை நினைக்க முடியாதளவு அற்புதமான அனுபவக் கதைகளை எழுதியிருக்கிறது. எப்போதுமே வாழ்க்கை ஒரு த்ரில்லர் கதை போன்றது.. அது காவியமல்ல.. மர்மங்கள் நிறைந்த கதைதான் ஏனென்றால் மனித மனமும் அறிவும் கலந்து அது எழுதப்பட்டுள்ளது.
ஆகவேதான் அதை எப்போதுமே ஜேம்ஸ் பாண்ட் 007 துப்பறிவது போல, நொடிக்கு நொடி, சொல்லுக்குச் சொல் துப்பறிந்தபடி நடப்பது அவசியம். என் வாழ்வில் ஒவ்வொரு வருடமும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் போலவே பரபரப்பாகவே நடக்கிறது.
வரும் 2024ம் ஓர் அழகிய புதிய திரைப்படம்.. வரலாறு காணாத பெரிய பட்ஜட் திரைப்படம் என்று மனது சொல்கிறது.. மகிழ்ச்சிப் பூக்களை அள்ளி வீசுகிறது..
வந்ததைவிட வருவது மேலும் அற்புதமானது.. 2024 கடந்து போன வருடங்கள் போல வழமையானது அல்ல மிகப் புதியது.. அந்த வெற்றிக் கதையில் என்னுடன் நடிக்கப் போகும் பொற்கால நடிகர்கள் யார்.. பெரும் பெரும் ஸ்டார்களுடன் நடிக்க ஆசை.. காலம் என்ற மகத்தான இயக்குநரே அவர்களைத் தேர்வு செய்;கிறது.. இருப்பினும் அதற்கு நானேனே வழி காட்டுகிறேன். 2024 என்ற நாவலுக்கான கதை ரெடி.. ஆடலும், பாடலும், சிரிப்பும், வரவும் நிறைந்த மகிழ்வான திரைப்படம்.
ஆகா என்ன அழகு.. தங்கமான சப்பாத்தை கால்களில் மாட்டியபடி புதிய ஆண்டில் கால்பதிக்கிறேன்.. பிறக்கும் புதிய ஆண்டு என் மனதில் வரையும் கோலங்கள் இப்படியே இருக்கின்றன..
ஆம் 2024ன் ஏடுகளில் புதிய தங்கப் பேனாவால் இன்னொரு புதிய வரலாற்றை எழுத ஆரம்பிக்கிறேன்..
புதிய வானம் புதிய பூமி – எங்கும்
பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது..
யாருக்காகவும் காத்திருக்க என்னிடம் நேரமில்லை.. இறைவனுக்கு நன்றி எழுத்தோட்டம் ஆரம்பிக்கப்போகிறது..
நல்லவன் வாழ்வான்..
கி.செ.துரை 31.12.2023