என் அலுவலகத்தில் தினமும் மதிய உணவு

“பசி என வருபவர்கள் யாராக இருந்தாலும் கே.கே.நகரில் உள்ள எனது அலுவலகம் வாருங்கள். தினமும் மதிய உணவு போடுகிறேன். எல்லோரும் வயிறார சாப்பிட்டுச் செல்லுங்கள். என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் இதை செய்யப் போகிறேன்” என ‘குக் வித் கோமாளி’ மூலம் கவனம் பெற்ற நடிகர் புகழ் தெரிவித்துள்ளார்.

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் புகழ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் விஜயகாந்தின் இறப்புக்கு வந்திருந்தேன். இப்போது இங்கே வந்ததற்கு காரணமிருக்கிறது. உணவுக்கு கஷ்டப்படும் பலருக்கும் விஜயகாந்த் உதவியிருக்கிறார் என பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன்.

சென்னை வந்த புதிதில் 50 கிராம் பக்கோடாவும் வாட்டர் பாக்கெட்டும்தான் எனக்கு உணவு. நிறைய கஷ்டபட்டிருக்கிறேன். மறைந்த நடிகர் விஜயகாந்த் பசி என்று வந்தவர்களுக்கு உணவு கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இன்றிலிருந்து பசி என்று வருபவர்களுக்கு தினமும் மதியம் கே.கே.நகரில் உள்ள எனது அலுவலகத்தில் சாப்பாடு போடுகிறேன்.

என்னால் முடிந்த அளவுக்கு செய்ய உள்ளேன். தொடக்கத்தில் 50 பேர் என ஆரம்பிக்க உள்ளேன். அதற்கு விஜயகாந்திடம் ஆசீர்வாதம் வாங்கவே இப்போது இங்கே வந்தேன்.

பசி என்று வருபவர்கள் யாராக இருந்தாலும் கேகே நகரில் உள்ள எனது ஆஃபிஸுக்கு வாருங்கள். எல்லோரும் வயிறார சாப்பிட்டுச் செல்லுங்கள். என்னுடைய வாழ்நாள் முழுவதும் இதை நான் செய்யப்போகிறேன். உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் யாராவது பசி என சொன்னால் உடனே சாப்பாடு வாங்கி கொடுத்து உதவுங்கள். ஏனென்றால் பசி கொடுமையானது. எனக்கும் அதன் கஷ்டம் தெரியும்” என்றார்.

Related posts