அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மிஷன் சாப்டர்-1’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி கடந்த ஆண்டு ‘தலைவி’ படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் நடிகர் அருண் விஜய்யுடன் கைகோத்திருக்கிறார். இருவரும் இணையும் படத்துக்கு ‘மிஷன் சாப்டர்-1’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் நிமிஷா சஜயனும் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: சுத்தியல், துப்பாக்கி, ஏகிறி அடிப்பது, சுடுவது என மொத்த ட்ரெய்லரில் வன்முறை இல்லை. ட்ரெய்லரே வன்முறையாக உள்ளது. தொடக்கத்தில் ஒரு சென்டிமென்ட் காட்சி வந்து செல்கிறது. சிறையில் மாட்டிக்கொள்ளும் அருண் விஜய் அங்கிருந்து தப்பிச் செல்வது படத்தின் கதையாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.
வெளிநாடும், சண்டைக்காட்சிகளும், சிறைச்சாலையையத் தாண்டி ட்ரெய்லரில் புதிதாக எதுவும் தென்படவில்லை. டைட்டிலுக்கு கீழே ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற டேக் லைன் இடம்பெற்றுள்ளது. உண்மையில் அதற்கான அர்த்தம் படம் வந்த பிறகு தான் முழுமையாக தெரியும்.