4 தியேட்டர் இருந்தால் ஒன்றில் சிறு பட்ஜெட் படம்

ராகினி திவேதி,‘முருகா’அசோக்குமார் நடித்துள்ள படம், ‘இமெயில்’. ஆர்த்தி ஸ்ரீ, ஆதவ் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்ஆர் பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.ஆர். ராஜன் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர் அருள்தாஸ், வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கே.பாக்யராஜ் பேசும்போது கூறியதாவது: சிறு பட தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதைத் தயாரிப்பாளர் கே. ராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நானும் அவ்வப்போது இதுபற்றி கூறி வருகிறேன். ஒரு வளாகத்தில் 4 திரையரங்குகள் இருந்தால் ஒன்றை சிறுபட வெளியீட்டுக்காகக் கட்டாயம் கொடுக்க வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும். இமெயில் வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் பேப்பரில் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தோம். இமெயில் வந்த பிறகு பேப்பரின் தேவை குறைந்துவிட்டது. அதனால் மரங்களை வெட்டுவதும் குறைந்து இயற்கையும் பாதுகாக்கப்பட்டது.

ஆன்லைனில் தான் மோசடி நடக்கிறது என்றில்லை. படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கிச் சென்றாலும் அந்த இடத்தில் இருப்பவர்கள் லஞ்சம் கேட்பார்கள். அங்கே தனி யூனியன் வைத்திருப்பார்கள். அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள். இதுபோன்று நிறைய மோசடிகள் நாட்டில் நடக்கின்றன. தனி மனிதனாகப் பார்த்து திருந்தினால் மட்டுமே இது போன்ற மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறையும். இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார்.

Related posts