வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின்; தலைவி கைதுசெய்யப்பட்டுள்ளதை கண்டித்துள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபான் மக்டொனாக் இது தொடர்பில் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.
இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் (சிவநந்தன் ஜெனிற்றா) கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நான் உங்களிற்கு இந்த கடிதத்தை எழுதுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் இந்த கைதுகுறித்து பிரிட்டனின் கண்டனத்தை தெரிவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை தாக்கிய பொலிஸாரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இலங்கையிடம் கோரவேண்டும் நியாயமான விசாரணைகளை கோரவேண்டும் அதற்காக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் சிபான் மக்டொனாக் தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியை சந்திக்கமுயன்றவேளை அவர் கைதுசெய்யப்பட்டார் என சிபான் மக்டொனாக் தெரிவித்துள்ளார்.
துயரத்தில் சிக்குண்டுள்ள காணாமல் போனவர்களின் உறவுகள் அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய விரும்புகின்றனர் ஆனால் ஜனாதிபதி அவர்களை சந்தித்து அவர்களின் வேண்டுகோள்களை செவிமடுக்க மறுத்துள்ளார் அதேவேளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு படையினரால் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள் உலகில் அதிகளவானவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என ஐநாவின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான செயற்குழு தெரிவித்துள்ளது என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிவழங்கப்படுவதற்கு பதில் பாதிக்கப்பட்டவர்கள் துஸ்பிரயோகத்திற்குள்ளாவது குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சிபான் மக்டொனாக் இந்த கைதினை கண்டிப்பதற்கும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிப்பதற்கும் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் பிரதிநிதியை அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.