தயாரிப்பு : கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்
நடிகர்கள் : சிவகார்த்திகேயன் ரகுல் ப்ரீத்தி சிங் யோகி பாபு கருணாகரன் பால சரவணன் பானுப்பிரியா மற்றும் பலர்.
இயக்கம் : ஆர். ரவிக்குமார்
‘இன்று நேற்று நாளை’ என்ற திரைப்படத்தை ஃபேண்டஸி ஜேனரில் இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் ரவிக்குமார் ஆறாண்டுகளுக்கும் மேலாக கடுமையாக உழைத்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் ‘அயலான்: வேற்று கிரகவாசி என கருதப்படும் ஏலியன்களை முக்கிய கதாபாத்திரமாக வடிவமைத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.
விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்தடையும் விண்கல்லின் சிதறிய ஒரு சிறிய பொருள் ( ஸ்பார்க்) தொழிலதிபர் ஒருவரின் கைகளில் கிடைக்கிறது. அந்தப் பொருளின் அதி உயர் ஆற்றலை துல்லியமாக அவதானிக்கும் அந்தத் தொழிலதிபர், பூமியின் மையப்பகுதியில் உள்ள பிரத்யேக வளங்களை தோண்டி எடுத்து காசாக்க திட்டமிடுகிறார். இது பூமியின் சுற்றுச்சூழலுக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அலட்சியப்படுத்தி, நாசகரமான தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்.
பூமியில் சிதறிய விண்கல்லின் சிறிய பாகத்தை கண்டுபிடித்து எடுத்துச் செல்வதற்காக வேற்று கிரகத்திலிருந்து ஏலியன் எனும் உயிரினம் பூமிக்கு வருகிறது. இது மனிதர்களைப் பற்றிய தவறான கற்பிதங்களை கொண்டிருக்கிறது. பூமிக்கு பிரத்யேக விண்கலத்துடன் வந்திறங்கும் ஏலியன்.. விண்கலின் சிறிய பாகத்தை வைத்திருக்கும் தொழிலதிபரின் ரகசிய இடத்திற்கு சென்று, அந்த பாகத்தை மீட்டு, மீண்டும் தன்னுடைய விண்கலத்திற்கு செல்லும் வழியில்.. தொழிலதிபரின் கும்பலால் தாக்கப்பட்டு, விண்கலத்தையும் இழக்கிறார்.
இந்நிலையில் கிராமத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டும், தாயிடனும் வாழ்க்கை நடத்தி வருகிறார் நாயகன் சிவகார்த்திகேயன். சுற்றுப்புற சூழலுக்கும், அனைத்து உயிரினங்கள் மீதும் தீவிர அக்கறை கொண்ட நாயகனுக்கு. ஊர்மக்கள் தொடர்ந்து நெருக்கடி தர அவருடைய தாயாரின் ஆலோசனைப்படி சென்னைக்கு இடம்பெயர்கிறார். சென்னையில் தன்னுடைய வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரத்யேகமான இன்ப அதிர்ச்சி அளிக்கும் விருந்துகளை ஒருங்கிணைக்கும் கருணாகரன்- யோகி பாபு -கோதண்டம் குழுவுடன் இணைந்து கொள்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் சென்னையில் வந்திறங்கிய ஏலியன் சிவகார்த்திகேயனை சந்திக்கிறது. சிவகார்த்திகேயன் குழுவினருடன் இணைந்த ஏலியன்.. அந்த விண்கலின் சிதறிய பாகத்தையும், விண்கலத்தையும் வில்லனிடமிருந்து மீண்டும் கைப்பற்றியதா? இல்லையா? என்பதையும், ஏலியனுக்கு சிவகார்த்திகேயன் எந்த வகையில் உதவினார்? என்பதையும் விவரிப்பது தான் ‘அயலான்’ திரைப்படத்தின் திரைக்கதை.
படத்தின் ஆக பெரிய சிறப்பம்சம் என முதன்மையாக குறிப்பிட வேண்டியது தமிழ் சினிமாவில் படைப்பாளிகளால் சரிவர கையாளப்படாத அறிவியல் புனைவு கதை மற்றும் இது தொடர்பான கலை இயக்கம், கிறாபிக்ஸ், வி எஃப் எக்ஸ் ஆகிய பணிகள் இப்படத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பது தான். இதனைப் பாராட்ட வேண்டும். ஏலியன், ஏலியனின் தோற்றம், அதனுடைய பாவனைகள், உடல் மொழி என அனைத்தும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டு, அதனை நேர்த்தியாக திரையில் காட்சிப்படுத்திருப்பது.. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்து, கரவொலி எழுப்பவைக்கிறது. குறிப்பாக இந்த அயலான் குழந்தைகளை வெகுவாக கவரும்.
படத்தின் தொடக்கத்தில் கிராமம், விவசாயம் என தமிழ் படத்தில் ஏற்கனவே பேசிப் பேசி சலித்து போன விடயங்களை காட்சி படுத்தி ரசிகர்களிடம் சோர்வை ஏற்படுத்தினாலும், ஏலியன் எனும் அயலான் வந்த பிறகு ரசிகர்களிடம் ஆர்வம் ஏற்படுகிறது. அந்த ஆர்வம் இறுதிவரை தொடர்வதால் படத்தை ரசிக்க முடிகிறது. இடையிடையே சில காட்சிகள் மீண்டும் மீண்டும் இடம் பிடித்தாலும் ஏலியன் அனைத்தையும் மறக்கடிக்கிறது.
கருணாகரன் -யோகி பாபு -கோதண்டம் குழு முதல் பாதியில் சில இடங்களில் புன்னகையை வரவழைக்கிறது. ராகுல் ப்ரீத் சிங் தனக்குரிய பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார். நாயகன் சிவகார்த்திகேயன் இந்தப் படத்திற்காக பல ஆண்டுகளாக நடித்திருப்பதால் அவருடைய தோற்றத்தில் சில சில மாற்றங்கள் இருந்தாலும், அவருடைய வழக்கமான உற்சாகமிக்க நடிப்பை வழங்கி இருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் நடிகர் சரத் கெல்கர் முத்திரையிடப்பட்ட கொர்ப்பரேட் வில்லனாக தன்னுடைய பங்களிப்பை செய்திருக்கிறார். இவருக்கு உதவியாளராக நடித்திருக்கும் பொலிவூட் நடிகை ஈஷா கோபிகர் சண்டை காட்சிகளில் தன் இருப்பை வெளிப்படுத்துகிறார்.
ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், இசையமைப்பாளர், வி எஃப் எக்ஸ் குழுவினர், படத்தொகுப்பாளர் என அனைவரும் இயக்குநருக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை அளித்து படைப்பை வெற்றி பெற செய்து இருக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மானின் பாடல்களை விட பின்னணி இசை நன்றாக இருக்கிறது.
‘அயலான்’ எனும் வேற்று கிரக வாசி ஒருவரை மையப்படுத்திய படைப்பு என்பதால்.. அவரை மட்டுமே நேர்த்தியாக உருவாக்கி திரையில் உலவ விட்டிருக்கிறார்கள். அதைக் கடந்து புதிய விடயங்கள் திரைக்கதையில் இடம் பெறவில்லை. அதே தருணத்தில் ஏலியனை வைத்து வழக்கமான கொமர்சல் அம்சங்களை குழந்தைகள் முதல் குழந்தை தனத்துடன் இருக்கும் அனைவரையும் ரசிக்கும் வகையில் அயலான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காகவே படக்குழுவினரைத் தாராளமாகப் பாராட்டலாம்.
அயலான் – ரசிக்க வைக்கும் வேற்றுக்கிரகவாசி