நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது நீண்டகால காதலரான கிளார்க் கெய்ஃபோர்டை இன்று சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு 43 வயதான ஜெசிந்தா ஆர்டெர்னும் 47 வயதான கிளார்க் கெய்ஃபோர்டும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளவிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக திருமணம் இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றையதினம் நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் 325 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகிய ஹாக்ஸ் பே பகுதியில் திருமணம் நடைப்பெற்றுள்ளது.
2014 ஆம் ஆண்டிலிருந்து காதலித்துவந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார்கள்.
ஜெசிந்தா ஆர்டெர்ன் 2017 ஆம் ஆண்டில் 37 வயதில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது உயரிய பதவியை பெற்ற உலகின் இளைய பெண் தலைவர் என்று அறியப்பட்டார்.
பதவியேற்று ஒரு வருடம் கழித்து, அவர் குழந்தை பெற்றுகொண்டபோது, பதவியில் இருக்கும்போது குழந்தை பெற்றுகொண்ட இரண்டாவது பெண் தலைவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். மேலும், அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் தனது குழந்தையுடன் அவர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.