செபமாலை டானியல் மாஸ்டருக்கு புகழ் அஞ்சலி..

சற்று முன்..

அதிகாலையின் முதல் குரலாக டானியல் மாஸ்டர் விடை பெற்றார் என்ற செய்தி கிடைத்தது…

என்ன சொல்வது.. சில மாதங்களின் முன் டென்மார்க் பிலுண்ட் விமான நிலையத்தில் வைத்து அவரை இலங்கைக்கு வழியனுப்பியபோது மறுபடியும் வருவேன் என்று போனவர்..

அவர் மறுபடியும் வராமலும் போகலாம் காலத்தின் முடிவை யார் அறிவார்.. அவரை பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

மனம் அப்படித்தான் சொன்னது..

உறக்கத்தில் இலங்கையில் மலையகத்தின் உச்சியைத் தாண்டி உயரமாக ஒரு பெரு நெருப்பு எரிவது போன்ற கனவு..

ஏன்.. விழித்திருந்தேன்..

விடிகாலை.. அவர் மாரடைப்பால் மரணித்த செய்தியை அவர் அன்பு மகன் கிறிஸ்டி கூறினார்.

எப்போதுமே கால நதி பின்நோக்கி ஓடுவதில்லை ஆனால் மனம் அதை பின் நோக்கி இழுத்துச் செல்லும்..

அன்றொருநாள் 1976 ல் முதல் நாள் ஆசிரியப்பணியில் தொண்டைமானாறு மகாவித்தியாலயம் செல்கிறேன். ஆசிரியர் ஆனவுடன் எல்லாம் முடிந்துவிடாது, மாணவர் ஏற்க முன்னர் அந்தப் பாடசாலையில் இருக்கும் ஆசிரியர்கள் ஏற்க வேண்டும்.

அது சாதாரண வேலையல்ல போர்க்களத்தில் வியூகம் உடைத்தது போன்ற மிக மிக கடினமான பணி என்பதை அப்போதுதான் கண்டு கொண்டேன். அந்த நேரம் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம பந்தம் போல ஒரே ஒரு முகம் சிரித்த முகத்துடன் வரவேற்றது, அதுதான் செ. டானியல் மாஸ்டர்.

அந்த சிரிப்பே என் ஆசிரிய வாழ்வின் முதல் விளக்கு.. அவருக்கு நான் என்றும் கடமைப்பட்டவன் என்ற உறுதியான முடிவுக்கு வருகிறேன். அன்று தொடங்கிய நட்பு இன்று வரை விட்டுவிடாத உறவாக அவர் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் தொடர்கிறது.

சில மாதங்களுக்கு முன் தொண்டைமானாறு மகாவித்தியாலயம் சென்று அவர் வாழ்ந்த இடம், அவரும் நானும் நட்பாக தேநீர் குடித்த இடங்கள் என்று எல்லாவற்றையும் பார்த்தேன். இன்றிருக்கும் ஆசிரியர்களுக்கு நான் அங்கு ஆசிரியராக முதலில் பணிக்கு சேர்ந்தது தெரியவில்லை. டானியல் மாஸ்டரையும் அவர்களுக்கு தெரியாதிருக்கலாம்.. இன்று அவருக்காக ஓர் இரங்கல் கூட்டம் அங்கு நடக்குமா தெரியாது..

” இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்திட்டான் ” என்ற நமது நாட்டின் பழக்கத்தில் இத்தகைய பெருமக்களை நினைவுகூர நேரமும், தகவலும், அவர்கள் பற்றிய ஆவணங்களும் பாடசாலைகளில் இருக்குமா தெரியாது. நான் கற்பித்த பாடசாலைகளுக்கு சென்று நான் இப்பாடசாலையின் பழைய ஆசிரியன் என்று அங்குள்ள ஆசிரியர்களுக்கு விளங்கப்படுத்துவது இன்று பெரும் பாடாக இருக்கிறது.

இப்படிப்பட்ட பல நூற்றாண்டுகள் பின் தங்கிக் கிடக்கும் நமது பாடசாலைச் சூழலில் தன்னோடு படிப்பித்த ஆசிரியர்கள் படித்த மாணவர்கள் எல்லோரையும் ஒருவர் விடாது இதயத்தில் சுமந்த ஆட்டோகிராப்பாக வாழ்ந்தவர் நம் டானியல் மாஸ்டர்.

அவர் காலத்து ஆசிரியர்கள் யாரும் இப்போது பூமியில் இருப்பதாக தெரியவில்லை. தொண்டைமானாறு மகாவித்தியாலயத்தில் நான் பார்த்த மூத்த தலைமுறை ஆசிரியர்களின் கடைசி பெரும் குரலும் இன்றோடு அடங்கிவிட்டது.

சில ஆண்டுகளில் போர் ஆரம்பித்துவிட்டது, நானும் தொண்டைமானாறை விட்டு சென்று பல ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், ஒரு நாள் அவரை பேருந்தில் தற்செயலாகக் கண்டேன்.

அப்போது மாஸ்டர் ” இனி இந்த நாட்டில் இருக்க முடியாது. என்னுடைய கனவுகளை நிறைவேற்ற இந்த நாடு எனக்கு இடம் தர மறுக்கிறது. துப்பாக்கிகளை வெறுக்கும் என்னைப் போன்ற ஒருவனுக்கு இங்கு வாழ இடமில்லை. நான் டென்மார்க் புறப்படுகிறேன் ” என்றேன்.

அப்போது அவர் தன் மகனையும் அழைத்துச் செல் என்றார். என் பிள்ளை போல அவர் மகன் டி.என்.கிறிஸ்டியையும் அழைத்தபடி டென்மார்க் வந்தேன். அன்றொருநாள் பாடசாலையில் என்னை சிரித்த முகத்துடன் வரவேற்று வழி காட்டிய புன்னகை முகம் என்பதால் அவர் சொல்வதை நான் மறுப்பதில்லை.

பின்னாளில் எனது பூக்கள் திரைப்பட வெற்றிவிழா டென்மார்க்கில் நடந்த போது அவரே தலைமை தாங்கி நடத்தினார். அப்போது அவர் பேசி பேச்சில் சொன்ன ஒரு வசனம் என்னை திகைக்க வைத்தது. ” இவனைப் போன்றவர்கள் எங்கள் தாய் நாட்டில் இல்லாததால் நாம் இழந்த இழப்பு கொஞ்சநஞ்சமல்ல. இதுதான் நமது நாடு இழைத்த தவறுகளில் எல்லாம் மன்னிக்க முடியாத இமாலயத் தவறு.”

” கேத்திரப் பொறி முறை வரைதலில்இ தொழில் நுட்ப பாடங்களில் இன்று கை தேர்ந்த ஆசிரியர்கள் நம்மிடம் இல்லை. எங்கள் நாட்டில் இருந்திருந்தால் கல்வித்துறையில் அதி உயர் பதவியில் இருந்திருக்க வேண்டியவனை எமது நாடு இழந்துவிட்டது ” என்று பாராட்டினார். அந்த வரிகள் அல்ல இங்கு முக்கியம் அப்படிச் சொல்ல ஒரு மனம் வேண்டும். அந்த மன வளம்தான் ஆசிரியர்க்கான அதி உயர் இலட்சணம். அதனால்தான் இன்றும் அவரை மறக்க முடியவில்லை.

கடைசியாக சில மாதங்களின் முன் டென்மார்க் வந்திருந்தார். நேரம் இல்லை என்னால் உடன் போக முடியவில்லை. போனபோது ” அவன் என்னைப் பார்க்க வரமாட்டான் ” என்று கூறிக்கொண்டே இருந்தார் என்று அவர் அன்பு மருமகள் சுமதி கிறிஸ்டி என்னிடம் கூறினார். எப்படியோ போய்விட்டேன், பின் இலங்கைக்கு விமான நிலையத்தில் வைத்தும் அனுப்பிவிட்டேன்..

என் வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் என்னோடு நின்றவர், என் தந்தை இறந்தபோது ஓடி வந்தவர். இன்று நானின்றி அவர் பயணம் நடக்கிறது.. அன்று பார்த்ததுதான் கடைசிப் பயணம் என்பதை இன்று வந்த செய்தி சொல்லிப் போனது.

என் வாழ்வில் அரை நூற்றாண்டு காலம் தொடர்ந்து சோளகமாக வீசிய அச்சுவேலி பத்தமேனி செ. டானியல் மாஸ்டரின் பிரிவு என் மனதில் பிரிவல்ல அது காலத்தால் அழியாத காவியக் கோலமாக இருக்கிறது. மாஸ்டர் உங்களுக்கு மரணமில்லை எங்கள் மனங்களில் வாழ்கிறீர்கள்..

ஒரு மகத்தான ஆசிரியருக்கு என் புகழ் அஞ்சலிகள்..

கி.செ.துரை 16.01.2024

Related posts